தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவிடயத்தினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுதாவளையில் நடைபெற்ற தந்தை செல்வாவின் 40வது நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கருமங்கள் முன்னெடுக்கப்படுகின்றபோது நாங்கள் நிதானமாக தொலைநோக்குடன் கூடியளவு எல்லோருடைய ஆதரவையும் பெறக்கூடியவகையில் பகையினையும் எதிர்ப்பினையும் வளர்க்காமல் இந்நாட்டிலுள்ள எல்லா மக்களும் அதனை ஆதரிக்கக்கூடிய வகையில் விஷேடமாக சர்வதேச சமூகம் எமது நிலைப்பாட்டினை நிதானமான பக்குவமான ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எமது கருமத்தை முன்னெடுக்க வேண்டும்.
உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய அரசியல் சாசனம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். நாட்டிலுள்ள ஏனைய மக்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பு நடைபெற்று அது அங்கீகரிக்கப்படவேண்டும்.
அதற்காக நாங்கள் விட்டுக்கொடுக்க முடியாத விடயங்களை விட்டுக்கொடுக்கமுடியாது. .அதனை நாங்கள் செய்ய மாட்டோம். தமிழ் மக்களுக்கு ஏற்பில்லாத ஒரு தீர்வை நாங்கள் ஏற்கமாட்டோம். ஏற்க முடியாது.
தீர்வு தயாரிக்கப்பட்ட பிறகு அந்த தீர்வு சம்பந்தமான விளக்கங்களை எமது மக்களுக்கு நாங்கள் சமர்ப்பிப்போம்.
உங்கள் ஆலோசனைகளை நாங்கள் பெறுவோம். உங்கள் கருத்துகளின் அடிப்படையில்தான் நாங்கள் இறுதிமுடிவினையெடுப்போம்.
அதேசமயம் தற்போது ஏற்பட்டிருக்கின்ற சந்தர்ப்பத்தை நாங்கள் உதாசீனம் செய்யக்கூடாது. இன்னுமொரு வாய்ப்பு மிக விரைவில் வருமென்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது.
இந்த நாட்டிலுள்ள ஆட்சிமுறை எமக்கு உகந்ததாக அமைவதற்கு இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பதாகவும் அதற்கு பிறகும் ஏற்பட்ட பல வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் நாங்கள் இழந்திருக்கின்றோம்.
தொடர்ந்தும் நாங்கள் இழக்க முடியாது. தற்போதிருக்கின்ற நிலை தொடருமானால் அதனால் ஏற்படுகின்ற ஆபத்து எமது மக்களுக்கே.
காணிவிடயம் சம்பந்தமாக சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக சமூக பொருளாதார கலாசார உரிமைகள் சம்பந்தமாக மக்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். அவை முடிவுக்கு வரவேண்டும்.
எமது மக்களுடைய இறைமையின் அடிப்படையில் அதிகாரங்களை நாங்கள் கைப்பற்றி அதிகாரங்களை நாங்கள் பயன்படுத்தி எமது மக்களுடைய அபிலாஷைகளையும் உரிமைகளையும் பயன்படுத்தக்கூடியதொரு நிலை வரவேண்டும்.
எங்கள் மக்கள் மத்தியில் ஒற்றுமையாக ஒன்றுபட்டுநிற்கவேண்டும்.இதுவரையில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமிழரசுக்கட்சியின் கொள்கையின் பின்னால் நின்றுள்ளனர்.அதுவே அரசியல் சாசனம்.அதற்காக ஒவ்வொரு தேர்தலிலும் தமிழரசுக்கட்சியின் பின்னால் மக்கள் நின்றார்கள்.
எங்களது சம்மதம் இல்லாமல் எங்கள் மீது ஆட்சி அதிகாரம் செலுத்தப்படுகின்றது. ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைகள் சர்வதேச பிரகடனத்தில் ஒரு இனத்தை ஆட்சி செய்வது என்றால் அவர்களின் சம்மதம் ஒப்புதல் இருக்கவேண்டும்.
அந்த சம்மத்தை ஜனநாயக தீர்ப்புகள் ஊடாக வழங்கப்படவேண்டும். எம்மைப்பொறுத்தவரையில் நாம் நீண்ட காலமாக ஜனநாயக ரீதியாக வழங்கிய தீர்ப்பு யாதெனில் இந்த நாட்டின் ஆட்சி முறையில் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும் என்பது தான்.
நாம் ஆட்சி செய்யப்படுகின்றோம். எமது விருப்பத்தின் அடிப்படையிலோ சம்மதத்தின் அடிப்படையிலோ அல்ல எமது எதிர்ப்பிற்கு மத்தியில் கட்டாயமாக ஆட்சி செய்யப்படுகின்றோம்.
ஒரு அரசியல் தீர்விற்காக முயற்சி செய்து அதை சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தினூடாக பங்களித்து அவ்விதமாக இருக்கின்றபோது நாங்கள் மிகவும் நிதானமாக நடக்கின்றோம். மக்கள் ஒருமித்து குரல் கொடுக்கின்றபோது அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறான நிலையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் மாறுபட்ட கருத்தை கூறுகின்றவர்கள் வருடாந்த ரீதியாக பரம்பரையாக அக்கருத்தை கூறிவருகின்றார்கள். அதனை நீங்கள் கவனத்தில் எடுக்காமல் மிகவும் தெளிவாக சிந்தித்து செயற்பட வேண்டும்.
காணிப்பிரச்சனைகள் இருக்கின்றன, காணாமல் போனோர் பிரச்சினைகள், மீள்குடியேற்றப் பிரச்சனைகள், புனர்வாழ்வு, வேலைவாய்ப்பு என பலவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன.
இவ்வாறான பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நமக்கு ஒரு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும். அரசியல் தீர்வு ஏற்பட்டால் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
தமிழ் மக்களுக்குள்ள காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். காணிகள் விடுவிக்கப்படுகின்றன.காணாமல்போனோர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த சட்டம் இதுவரையில் அமுலாக்கப்படாத நிலையில் அது அமுலாக்கப்படவேண்டும்.நடக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.
மக்களின் உணர்வுகளை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். மக்களின் போராட்டங்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம்.மக்களின் போராட்டங்களின் நியாயங்களை ஒவ்வொரு இடத்திலும் எடுத்துக்கூறவேண்டும்.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வினைக்காண்பதற்கு நாங்கள் கடும் முயற்சிகளை எடுத்துவருகின்றோம்.
இந்தக் கப்பலை எவ்வாறு கரைசேர்ப்பது. தலைவர்கள் மாத்திரமல்ல, மக்களுக்கும் பாரிய பங்குஉள்ளது. இதனை அனைவரும் உணர்ந்து ஒன்றுபட்டு செயற்படமுன்வரவேண்டும் என்றார்.