பசிலுக்கு முக்கியத்துவம்! மஹிந்தவினால் ஓரங்கட்டப்பட்ட விமல், உதய கம்மன்பில

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின பேரணி கூட்டம் நாளை கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.

இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் மே தின பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பசில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய பிரசன்ன ரணதுங்க, பவித்ரா வன்னிஆராச்சி, ரேணுகா பெரேரா உள்ளிட்ட குழுவினரால் மேதினத்திற்கான ஏற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த வருடம் இதற்காக முன் நின்று செயற்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் இம்முறையில் அந்த நடவடிக்கைகளில் இருந்து பின் தள்ளப்பட்டுள்ளனர்.

விமல் கம்மன்பில உட்பட குழுவினர் நாளை தினம் நடைபெறும் மே தின பேரணியில் கலந்துக் கொள்ளும் நடவடிக்கையினை மாத்திரம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலைமைக்கு மத்தியில் நாளை நடத்தப்படவுள்ள மே தின பேரணியில் மக்கள் கலந்துக் கொள்வது தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் நன்கு அறிந்திருந்த பசில் காலி முகத்திடலில் அரை வாசியை மறைத்து மேடையை மத்தியில் அமைக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின பேரணியில் கலந்து கொள்ளும் மக்கள் கூட்டத்தினால் காலி முகத்திடலிலுள்ள கடல் மறைக்கப்படும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.