மே தினக் கூட்டங்களுக்காக 12000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதான அரசியல் கட்சிகள் தங்களது கட்சி ஆதரவாளர்களை போக்குவரத்து செய்ய இவ்வாறு 12000 பஸ்களை பயன்படுத்திக் கொள்ளவுள்ளன.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களும், தனியார் துறையினருக்கு சொந்தமான பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இதில் நான்காயிரம் பஸ்கள் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமானது என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அனைத்து பஸ்களும் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாடகை அடிப்படையில் எண்ணாயிரம் பஸ்களை தனியார் துறையினர் வழங்குவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கண்டி கட்டம்பே உள்ளிட்ட இடங்களில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களில் பங்கேற்கும் மக்களை போக்குவரத்துச் செய்ய இவ்வாறு பஸ்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
இவ்வாறு போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ள பஸ்களுக்கு ஏதேனும் சேதம் விளைவிக்கப்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பினையும் குறித்த அரசியல் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டுமென கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் பெருமளவு பஸ்களை வாடகைக்கு அமர்த்தியுள்ள காரணத்தினால் சாதாரண போக்குவரத்திற்கான பஸ்களில் தட்டுப்பாடு நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.