தொழிலாளர் உரிமைகளுக்காக அர்ப்பணிப்பு செய்த அனைவரையும் கௌரவிப்போம்! ஜனாதிபதி

தொழிலாளர் உரிமைகளுக்காக அர்ப்பணிப்பு செய்த அனைவரையும் கௌரவிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச உழைப்பாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பண்டைய வரலாற்றுக் காலம் முதல் மானுட சுதந்திரம், தொழிலாளர் உரிமைகளுக்காக உயிர் தியாகம் செய்த, இரத்தத்தை வியர்வை சிந்திய உலகத்தின் அனைத்து தொழிலாளர் தோழர்களும் கௌரவிக்கப்பட வேண்டும்.

மனித உழைப்பின் உன்னதத்தை போற்றி புகழும் வகையில் இந்த மே தினம் கொண்டாடப்படுகின்றது.

உலக வாழ் அனைத்து உழைப்பாளர் சகோதரர்களையும் வணங்கி இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிடுகின்றேன்.

மே தினத்தை இலங்கையில் விடுமுறை தினமாக முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அறிவித்திருந்தார்.

அன்று முதல் இலங்கையில் தொழிலாளர்கள் பல்வேறு வெற்றிகளை ஈட்டியுள்ளனர்.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் பொருளாதார சுபீட்சத்தை உருவாக்குதல் ஆகிய சவால்களை வெற்றிக் கொள்ளும் முனைப்பில் தொழிலாளர் தோழர்களின் பங்களிப்பு அளப்பரியதாகும்.

உலக பொருளாதார ஓட்டம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமைகளை புரிந்து கொண்டு பொறுப்புணர்ச்சியுடன் தொழிலாளர் தோழர்கள் செயற்படுவார்கள் என நம்பிக்கை கொள்வதாக ஜனாதிபதி தனது மே தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.