இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்பவர் புஜாரா. இந்த சீசனில் இந்திய அணிக்காக 13 போட்டியில் விளையாடி அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 1316 ரன்கள் குவித்துள்ள அவரின் சராசரி 62.66 ஆகும். நான்கு சதங்கள் விளாசிய அவர், ஐ.சி.சி. தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆனால் ஐ.பி.எல். தொடரில் அவரை எந்த அணியும் விலைகொடுத்து வாங்கவில்லை. இதனால் உடற்பயிற்சி, டிரைனிங், குடும்பத்துடன் நேரத்தை செலவிடுதல் என பொழுதை கழிக்கிறார். ஆகவே, தொலைக்காட்சியில் ஐ.பி.எல். போட்டியை பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து புஜாரா கூறுகையில் ‘‘தினந்தோறும் பெரும்பாலான நேரம் பயிற்சி அல்லது உடற்தகுதிய டிரைனிங்கில் சென்று விடுகிறது. குடும்பம் மற்றும் நம்பர்களுடன் இருக்கும்போது மாலை நேரத்தில் டி.வி.யை ஆஃப் செய்துவிடுவேன். நான் ஏன் ஐ.பி.எல். தொடரை டி.வி.யில் பார்க்கவில்லை என்றால், நான் ஐ.பி.எல். அணியில் இல்லை என்பதால் மட்டுமல்ல. எப்போதாவது நான் போட்டியை பார்ப்போன். யாராவது ஐ.பி.எல். போட்டியை பார்த்தால் அப்போது நானும் பார்ப்பேன்’’ என்றார்.