வலிமை பெறுவாரா சரத் பொன்சேகா?

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை பாதுகாப்புத் துறையைக் கையாளும் உயர்மட்டப் பதவி ஒன்றுக்கு நியமிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட தகவல் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஏப்ரல் 25ம் திகதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது பற்றி ஆராயப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இந்த யோசனையை அமைச்சரவையில் முன்வைத்திருக்கிறார். இதற்கு அமைச்சர்கள் ஆதரவும் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது வகிக்கின்ற அமைச்சர் பதவியையும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் விட்டு விலகி பாதுகாப்பு விவகாரங்களைக் கையாளும் உயர்மட்டப் பதவியொன்றை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஏற்றுக்கொள்ள இணங்கியிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு அவருக்கு இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்புத் துறையின் உயர்மட்டப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் கசிந்திருந்தன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அத்தகைய திட்டம் ஒன்று இருந்து வந்தது. அதற்குள் ஐதேக அவரை தனது பக்கம் இழுத்துக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரமன்றி அமைச்சர் பதவியையும் வழங்கியது.

அண்மைய அரசியல் சூழல்களை அடுத்து சரத் பொன்சேகாவை பாதுகாப்பு விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பில் நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது.

சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவுள்ள பதவி என்ன என்பது பற்றி அமைச்சர் ராஜித சேனாரத்ன குழப்பமான தகவல்களையே வெளியிட்டுள்ளார் என்ற போதிலும் பரந்துபட்ட அதிகாரங்களைக் கொண்ட ஒரு பதவியிலேயே அவர் அமர்த்தப்படவுள்ளார் என்பது உறுதியாகத் தெரிகிறது.

மீண்டும் இராணுவத் தளபதியாக நியமிக்கும் வாய்ப்புக்கள் இல்லை. ஏனென்றால் ஏற்கனவே அவர் அந்தப் பதவியில் இருந்தவர். அதற்கு மேலாக பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாகவும் கூட்டுப் படைகளின் தளபதியாகவும் இருந்தவர்.

அதைவிட இராணுவத்தளபதி பதவியானது லெப்.ஜெனரல் தரத்தில் உள்ள ஒருவருக்கானது. அதற்கு அப்பால் ஜெனரலாகவும் இருந்து இப்போது பீல்ட் மார்ஷலாக இருக்கும் சரத் பொன்சேகாவை மீண்டும் நியமித்தால் அது அவரைப் பெருமைப்படுத்தாது. எனவே மீண்டும் அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்க முடியாது.

அதைவிட இராணுவத் தளபதி ஒருவரால் முப்படைகளையும் பொலிஸாரையும் கட்டுப்படுத்த முடியாது. சரத் பொன்சேகாவுக்கு அனைத்துப்படைகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட ஒரு பதவியே உருவாக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. அது கூட்டுப்படைகளின் தளபதி என்ற பெயரிலோ அமையக்கூடும்.

போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகள் கழித்து சரத் பொன்சேகாவுக்கு இராணுவத்துக்குள் முக்கியத்துவம் கொடுக்கும் பதவியை வழங்க அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.

அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு பாதுகாப்பு நோக்கங்கள் காரணமாக இருக்கவில்லை. முற்றிலும் அரசியல் நோக்கங்களே இந்த நியமனத்தின் பின்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்திய நிறுவனத்துக்கு அரசாங்கம் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் 1500 பேர் கடந்த திங்கட்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

24 மணி நேரம் கூட நடக்காத அந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டது. இதுதான் மறுநாள் அமைச்சரவையில் இந்த விவகாரம் குறித்து தீவிரமாக கலந்துரையாடப்படுவதற்கு காரணமாகியது.

அதன் விளைவாகத் தான் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்புத் துறையை கவனிக்கும் பொறுப்பு வழங்கும் யோசனையை ஜனாதிபதி முன்வைத்திருந்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் பல்வேறு போராட்டங்களால் வெறுப்படைந்து போயிருக்கிறது. இத்தகைய போராட்டங்கள் இன்னும் தொடர்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்பதாலேயே அவற்றை ஒடுக்குகின்ற புதிய வழியாக சரத் பொன்சேகாவைப் பயன்படுத்த அரசாங்கம் முற்படுகிறது.

அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தை தொடங்கிய போது அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டது. சீனக்குடா எண்ணெய்க் குதங்கள் தொடர்பாக இந்தியாவுடன் உடன்பாடு செய்ய முயற்சிக்கின்ற போதும் போராட்டம் நடத்தப்படுகிறது. இதுபோல எந்தத் திட்டத்தை முன்னெடுக்க முனைந்தாலும் அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படுவது இப்போது வழக்கமாகியுள்ளது.

கொழும்பில் போராட்டங்கள் நடத்தப்படாத நாட்கள் அரிதாகத்தான் இருக்கின்றன. மக்கள் விரோத அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் இருப்பது போன்ற தோற்றப்பாட்டை இது வெளிப்படுத்தப் பார்க்கிறது.

முன்னைய அரசாங்கம் பதவியில் இருந்த போது இதுபோலப் போராட்டங்கள் நடத்தப்படவில்லை. அவ்வாறு போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தால் அவை இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்படும் நிலை காணப்பட்டது.

இப்போது கிடைத்திருக்கின்ற ஜனநாயக வெளிதான் எதற்கெடுத்தாலும் போராட்டங்களை நடத்துகின்ற துணிச்சலையும் உரிமையையும் கொடுத்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இந்த உரிமை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு.

போராட்டங்கள், வேலைநிறுத்தங்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைத் தடுப்பது மக்களின் இயல்பு வாழ்ககையில் குழப்பங்கள் நிகழாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் தான் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு புதிய பதவியை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதைவிட மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினரும் கூட அவ்வப்போது அரசாங்கத்தைக் கவிழ்ப்போம் ஆட்சியைப் பிடிப்போம் என்று மிரட்டி வருகின்றனர். வீதியில் இறங்கி கொழும்பை ஸ்தம்பிக்கச் செய்யப் போவதாகவும் அலரி மாளிகையை முற்றுகையிடப் போவதாகவும் கூட மகிந்த ராஜபக்ச எச்சரித்திருந்தார். அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களின் பின்னணியில் மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியே இருப்பதாகவும் கூட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

அரசாங்கத்தை முடக்குவதற்காக கூட்டு எதிரணி தீட்டும் திட்டங்களை முறியடிப்பதும் கூட சரத் பொன்சேகாவை இந்த உயர் பொறுப்புக்கு நியமிக்கும் முடிவுக்கு மற்றொரு காரணமாகக் குறிப்பிடலாம்.

எத்தகைய நெருக்கடியான சூழலையும் கையாளக்கூடிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடிய ஒரு பதவியே அவருக்கு வழங்கப்படக் கூடும்.

இது வரும் காலத்தில் அரசாங்கத்தின் திட்டங்களையும் வெளிநாடுகளுடன் செய்து கொள்ளும் உடன்பாடுகளையும் முடக்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் தடையை ஏற்படுத்தும் ஒரு முடிவாகவும் இருக்கும்.

அம்பாந்தோட்டை உடன்பாடு திருகோணமலை உடன்பாடு என்பன தவிர்க்க முடியாதவை. அவற்றை அரசாங்கம் செய்து கொள்ளத்தான் போகிறது. அதற்கு எதிராக போராட்டம் நடத்துவோரை ஒடுக்கும் நடவடிக்கைகளை சரத் பொன்சேகாவே முன்னெடுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இது மாத்திரமன்றி அரசாங்கம் ஜெனிவாவில் கொடுத்துள்ள வாக்குறுதிகளை குறிப்பாக பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதிகள் சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கும் கூட சரத் பொன்சேகாவின் ஒத்துழைப்பு பெறப்படக் கூடும். அவர் போர்க்குற்றங்கள் நிகழ்ந்ததை ஏற்றுக்கொள்ளாவிடினும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு தாம் தயார் என்று பகிரங்கமாக அறிவித்தவர்.

எனவே இராணுவத்தைக் கட்டிப்போடும் ஆற்றலும் அவருக்கு இருப்பதால் சரத் பொன்சேகாவை வைத்தே இராணுவத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முன்னைய ஆட்சியாளர்களின் முயற்சிகளுக்கும் ஆப்பு வைக்க அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது.

இந்த வகையில் சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்புத் துறையின் உயர்மட்டப் பதவியை கொடுக்கும் முடிவுக்கு தனியான ஒரு காரணத்தைக் கூறமுடியாது. இது ஒரு பலநோக்குத் திட்டம். ஆனால் இத்தகையதொரு சக்தி வாய்ந்த பதவியை உருவாக்கும் போது அது இராணுவமய சூழலை ஏற்படுத்தாதா, அரசியலில் இராணுவத்தின் செல்வாக்கு அதிகரிக்காதா என்ற சந்தேகங்கள் எழுவது இயல்பு.

இன்னொரு கோத்தபாய ராஜபக்சாவாக சரத் பொன்சேகா எழுச்சி பெறுவதை மீண்டும் ஒரு அதிகாரத்துவ ஆட்சியை நோக்கி இலங்கை செல்வதை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளுமா என்றும் தெரியவில்லை.

இராணுவத்துடன் தொடர்புடையவர்களுக்கு மிகையான அதிகாரங்கள் வழங்கப்படுவது ஆபத்தான அறிகுறிதான்.

சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதற்காகவே இந்த நியமனம் என்றால் அவருக்கு சட்ட்ம் ஒழுங்கு அமைச்சர் பதவியை வழங்கலாமே என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன சட்டம் ஒழுங்கு அமைச்சரால் இராணுவத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்று கூறியிருந்தார்.

அது உண்மை தான். சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவி இராணுவத்தைக் கட்டுப்படுத்தாது. முப்படைகளும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் தான் உள்ளது.

முன்னதாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த பொலிஸ் திணைக்களம் சர்வதேச நெருக்கடிகளால் தான் தனியாகப் பிரிக்கப்பட்டது. பொலிஸ் திணைக்களம் சிவில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென்று மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு கடுமையான சர்வதேச அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. அதனால் மகிந்த ஆட்சிக் காலத்திலேயே சட்டம் ஒழுங்கு அமைச்சு உருவாக்கப்பட்டது.

இந்தநிலையில் மீண்டும் பொலிஸ் மற்றும் முப்படைகளை ஒருங்கிணைக்கும் ஒரு பதவி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டால் அது போர்க்காலத்தில் இருந்ததைப் போன்ற சூழலுக்கே நாடு திரும்புவதற்கு வழி செய்யும்.

அத்தகைய மாற்றத்தை சர்வதேச சமூகம் எவ்வாறு ஏற்றுக் கொள்ளும் என்று தெரியவில்லை.

உள்நாட்டு நெருக்கடிகளை சமாளிக்க வேண்டிய தேவை அரசாங்கத்’துக்கு இருந்தாலும் சர்வதேச சமூகத்தினது கருத்துக்களையும் புறக்கணிக்க முடியாத நிலையில் தான் அரசாங்கம் இருக்கிறது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உயர் அதிகாரமளிக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு சர்வதேசம் எவ்வாறு பிரதிபலிப்பை வெளியிடப் போகிறது என்பதைப் பொறுத்தே அவருக்கான அதிகாரங்கள் எந்தளவுக்கு பகிரப்படும் என்பது தெரியவரும்.