அரசியல் ஆளுமையினால் எங்கள் முழு சமூதாயமும் குட்டிச்சுவராகிவிட்டது! சி வி விக்னேஸ்வரன்

அரசியல் ஆளுமையினால் எங்கள் முழு சமூதாயமும் குட்டிச்சுவராகிவிட்டதாக முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவுக் கலாச்சார மண்டபத்தில் நடத்தப்பட்ட கூட்டுறவாளர்களின் மேன தினப் பேரணியின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் நாளொன்றுக்கு 16 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும், சிறுவர்களும் வேலை செய்ய வேண்டும், பெண்களும் வேலை செய்ய வேண்டும் என்றே அப்போதைய தொழில் வழங்குநர்களின் எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதற்காகவும், சிறுவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகவும் பெண்களுக்கான சில பிரத்தியேக நன்மைகளைப் பெறுவதற்காகவும் அக்காலத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தமது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் தொழிலாளர்களுக்குரிய உரிமைகள் பலவற்றைப்பெற்றுக் கொள்வதற்காக 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ நகரில் அன்றைய தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமும் உயிரிழப்புக்களும் இன்னோரன்ன தியாகங்களுமே இன்றைய தொழிலாளர்கள் பெற்றுக் கொள்கின்ற பல சலுகைகளுக்கும் உரித்துக்களுக்கும் வித்திட்டதென்றால் மிகையாகாது.

அன்று சிக்காக்கோ நகரில் நாளொன்றுக்கு,

1.8 மணி நேர வேலை

2.கிழமைக்கு ஒரு நாள் விடுமுறை

3.குறிப்பிட்ட திகதியில் (5ம் திகதி) மாதச் சம்பளக் கொடுப்பனவு

4.ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளே தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்டது.

சிக்காக்கோ நகரில் 1886ம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மாபெரும் தொழிலாளர் புரட்சியை தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்ட போதும் அவரின் இரத்தம் தோய்ந்த மேலங்கிகளை கையில் உயரத் தூக்கிப் பிடித்தவாறு ஏனைய தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறான தொடர்ச்சியான போராட்டங்களே இன்று நாளொன்றுக்கு 8 மணித்தியால வேலை,வார இறுதி விடுமுறைகள், 21 நாட்கள் பிரத்தியேக விடுமுறை,24 நாட்கள் சுகயீன விடுமுறை,முழுச் சம்பளம், அரைச் சம்பளத்துடனான கற்றல் மற்றும் மகப் பேற்று விடுமுறைகள் என பலதரப்பட்ட சலுகைகளைஇன்றைய தொழிலாளர்களுக்கு கிடைக்க வைத்துள்ளது.

இவை அன்றைய தொழிலாளர்களின் தொடர் எழுச்சிப் போராட்டங்கள் மூலம் பெறப்பட்ட உரிமைகளாவன. அவர்கள் அன்று போராடியதால்த்தான் இன்று நாம் உரிமைகள் பெற்று வாழ்கின்றோம்.

இன்று நாம் போராடினால்த்தான் நாளை எம் வாரிசுக்கள் அதன் நன்மையைப் பெறுவார்கள். அவர்களின் போராட்டங்கள் எமக்குப் பல படிப்பினைகளை ஊட்ட வல்லன.

அதாவது தரமுடியாதென்ற மனோபாவத்தில் இருப்பவர்களை தட்டிக் கேட்டால்த்தான் பெற முடியும். தட்டிக் கேட்கும் போது தடியெடுத்தால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம்.

அல்லல்களையும் அவலங்களையும் அடிதடியையும் ஏற்று எமது போராட்டங்களை அமைதியாக நடத்திச் சென்றால்த்தான் தரமுடியாதென்றவர்களின் மனதிலும் தரமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

அத்துடன் தனித்துப் போராடாது ஒற்றுமையுடன் சேர்ந்து தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம் என்பனவே அந்தப் பாடங்கள்.

காந்திஜி தனது அஹிம்சைப் போராட்டத்தை நடத்த இவ்வாறான போராட்டங்கள் ஊக்குவிப்பாக அமைந்தன.

இதே போன்று 1893இல் முதலாவது தொழிலாளர் வேலை நிறுத்தம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டது.

இப் போராட்டத்தில் இலங்கையின் அச்சுப் பதிப்போர் தொழிலாளர் சங்கம்,மாட்டு வண்டிச் சங்கம்,டிராம் பஸ் வண்டித் தொழிலாளர் சங்கம் ஆகிய மூன்று சங்கங்களும் இணைந்து கொண்டே ஈடுபட்டன.

அக் காலத்தில் கொழும்புத் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டஉணவுப் பொருட்கள்,குடிவகை,பழங்கள் மற்றும் இன்னோரன்ன பொருட்கள் 1815 அளவில் அமைத்திருந்த கண்டிஇராச்சியத்தில்,ஐரோப்பியர்களின் இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு மாட்டுவண்டில்களே பயன்படுத்தப்பட்டன.

இவ்வாறு வண்டில்களைச் செலுத்திச் சென்றவர்கள்அவ் வண்டில்களின் ஆசனத்தில் ஏறி அமர்ந்திருந்து வண்டில்களைச்செலுத்த முடியாது என்ற ஆணையை எதிர்த்தே மாட்டுவண்டில் உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அக் காலத்தில் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் என்பன பொதுவாக இடதுசாரி அமைப்புக்களாகவே காணப்பட்டன.

டாக்டர். எஸ்.ஏ.விக்கிரமசிங்க,டாக்டர் என்.எம்.பெரேரா, டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வா, திரு.பிலிப் குணவர்த்தன ஆகிய இடது சாரிஅரசியல்வாதிகளே தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி தொழிற்சங்கங்களை அமைத்து அவற்றிற்கு ஒரு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கினார்கள்.

1952இல் அதாவது நாங்கள் கல்லூரியில் படித்த காலத்தில் ஆட்சியில் இருந்த யு.என்.பி அரசின் டட்லி சேனாநாயக்க அவர்கள் பிரதம மந்திரியாக இருந்த போது ஜே.ஆர்.ஜெயவர்த்தன நிதி மந்திரியாக இருந்தார்.

அப்போதைய அரசின் நிதி நெருக்கடியை எதிர்கொள்வதற்காகஅத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏற்றப்பட்டன. உதாரணமாக,

1 இறாத்தல் அரிசி 35 சதத்தில் இருந்து 70 சதமாக மாற்றப்பட்டது.

1இறாத்தல் சீனி 48 சதத்தில் இருந்து 64 சதமாக மாற்றப்பட்டது.

தபால்க்கட்டணம் 5 சதத்தில் இருந்து 10 சதமாக மாற்றப்பட்டது.

ரயில், பஸ் கட்டணங்கள் இருமடங்காக்கப்பட்டன.

இவ் விலைவாசி உயர்வுகளை எதிர்த்து தொழிலாளர்களையும் பொது மக்களையும் ஒன்றுதிரட்டி மாபெரும் ஹர்த்தால் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மக்களின் எதிர்ப்பையும் அதிருப்தியையும் அவதானித்த பிரதமர் டட்லி சேனாநாயக்கதனது பதவியைத் துறந்து இங்கிலாந்து சென்றார்.

தொழிலாளர்களின் ஒன்று பட்ட சக்தி எப்படியான தாக்கங்களை அரசிற்கு ஏற்படுத்த முடியும் என்பதை இன்றைய இளைஞர் யுவதிகள் அன்று நடத்தவற்றில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.

தொழிலாளர்களின் சக்தி ஒரு அரசாங்கத்தையே கவிழ்க்கக்கூடிய அளவு பலம் வாய்ந்திருந்ததெனஇதன் மூலம் நிரூபிக்கப்பட்டது.

இதே போன்று 1945களில் இலங்கை இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கத்தின் ஆரம்ப விழாவில் இந்தியாவின் பிரதம மந்திரியாக பிற்காலத்தில் விளங்கிய ஜவஹர்லால் நேரு அவர்கள்கலந்து சிறப்பித்ததால் அத்தொழிற்சங்கம் கூடிய அளவு பெறுமதி வாய்ந்ததாகியது.

சுதந்திரத்தின் பின்னர் அதன் பெயர் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் என மாற்றப்பட்டதுடன் சௌமியமூர்த்தி தொண்டமான் அதன் தலைவராக விளங்கினார்.

அத் தொழிற்சங்கத்தில் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கத்தவர்களாக விளங்கியமையால் தென்கிழக்காசியாவிலேயே அதிகூடிய அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு தொழிற்சங்கமாக அது விளங்கியது.

இப்போதும் அவ்வாறே அதிகூடிய அங்கத்தவர்களைக் கொண்ட தொழிற்சங்கமாக C.W.C என்ற அந்தத் தொழிற்சங்கமே விளங்குகின்றது.

அரசாங்கத்தை நிறுவுவது அல்லது அதில் மாற்றங்களைக் கொண்டுவருவது ஆகியவற்றில் C.W.C அக்காலத்தில் பெரும் பங்கு வகித்தது. அக்கால ஒற்றுமையும் ஒருமித்த செயற்பாடுகளும் அவ்வாறான அரசியல் மாற்றங்களையுந் தாக்கங்களையும் ஏற்பட வழிவகுத்தன.

ஆரம்ப காலங்களில்தொழிற்சங்க தலைவர்களாக விளங்கியவர்கள் அரசியல் கலப்புக்கள் அற்ற,தொழிலாளர்களின் பிரச்சனைகளை உலக அளவில் முன்னெடுக்கக்கூடிய அளவிற்கு ஆளுமையைக் கொண்டிருந்தனர்.

பின்னர் அரசியல் புகுந்துவிட்டது. எனினும்திரு.பாலாதம்பு,திரு.சண்முகதாஸன் ஆகியோர் I.L.O என அழைக்கப்படும் International Labour Organization கூட்டத்தொடர்களில் கலந்துகொண்டு இலங்கை தொழிலாளர்கள் தொடர்பாக பல தீர்மானங்களை முன்னெடுத்து நிறைவேற்றுவதற்கு காரணகர்த்தாக்களாக விளங்கினர்.

யாழ்ப்பாணத்தில் சுருட்டுத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக அக்காலத்தில் விளங்கிய திரு.ஏ.துரைராஜசிங்கம் என்பவர் பின்பு இலங்கை சமசமாஜக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினராக சில காலங்கள் இருந்தார்.

1950ல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை பஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக விளங்கியஜெயம் என அழைக்கப்பட்டதிருவாளர் தர்மகுலசிங்கம் அவர்கள் ஒரு வழக்கறிஞராக இருந்த போதும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக தொழிற்சங்கத்தில் இணைந்துகொண்டு நீண்டகாலம் உழைத்தார்.

இன்று ஒவ்வொரு தொழிற்சங்கமும் ஆரம்பிக்கும் போதே ஒரு அரசியல் பின்னணியைக் கொண்டதாக அமைந்திருப்பதால் தொழிலாளர்களின் நலன்கள் இலகுவில் விலை போகின்றன.

இதே போன்று கூட்டுறவுத்தந்தை என அழைக்கப்படும் வீரசிங்கம் அவர்களின் கடின உழைப்பில் உருவாக்கப்பட்ட வடமாகாண கூட்டுறவுத்துறை 1970களில் அரசியல் புகுந்ததால் இன்று நலிவடைந்த நிலையில் காணப்படுவது மனதிற்கு வேதனையளிக்கின்றது.

தனியார் வர்த்தக நிலையங்களை விட கூட்டுறவுச் சங்கங்களே கூடுதல் வருமானங்களைப் பெறவேண்டும்.

ஏனெனில் கூட்டுறவுச் சங்கங்கள் தனியார் வர்த்தக நிலையங்கள் போன்றவை அல்ல.அவற்றிற்கு நெறியாளர் குழு,இயக்குனர் சபை,அவற்றிக்கு அனுசரணையாக கூட்டுறவுப் பரிசோதகர்கள்,கூட்டுறவு ஆணையாளர், அமைச்சர் எனப் பல மட்டங்களில் கூட்டுறவின் வளர்ச்சியைக்கண்காணிக்கப் போதிய அலுவலர்கள், அமைச்சர்கள் இருக்கின்றார்கள்.

அப்படியிருந்தும் கூட்டுறவுச் சங்கங்கள் பொதுவாக இன்று நட்டத்தில் இயங்குகின்றன அல்லது வலுவற்றுக் கிடக்கின்றன.

கூட்டுறவுச் சங்கம் ஒன்று நட்டத்தில் செயற்படுகின்றதெனின் அதன் நிர்வாகத்தில் எங்கோ ஒரு இடத்தில் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் பிழைகள் நடைபெறுகின்றனஎன்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அளவுக்கு மிஞ்சிய ஆளணி,ஒழுங்கமைக்கப்படாத விற்பனை நடவடிக்கைகள்,சந்தைப்படுத்தல் போன்றவற்றில் புதிய வியாபார யுக்திகளை உள்ளெடுக்காமை,வியாபாரப் போட்டிக்கு தம்மைத் தயார்படுத்தாமை போன்ற பல காரணங்களை முன்வைக்கலாம். எந்த அளவுக்கு கூட்டுறவுத் துறையை எமது அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள் மாற்றியமைத்து திறன்மிக்க அமைப்புக்களாக்கி வருவாய்களை மேம்படுத்தி வருகின்றார் என்பதை நாம் உடனே கூற முடியாது.

ஆனால் அந்த எண்ணத்துடன்தான் அவர் செயற்பட்டு வருகின்றார் என்பது எமக்குத் தெரியும்.

கூட்டுறவு என்பது தமக்கான பொதுவான பொருளாதார, சமூக, கலாசார தேவைகளை, நோக்குகளை மேம்படுத்த, தன்னுரிமை கொண்ட தன்விருப்பார்ந்த மக்களை ஒன்று திரட்டி, கூட்டான உரிமை பெற்று ஜனநாயக வழியில் நடாத்தப்படும் ஒரு தொழில் முயற்சியாகும். கூட்டுறவை மேம்படுத்த பல கொள்கை அடிப்படையிலான விதிகள் தரப்பட்டுள்ளன.

அவற்றைப் பின்பற்றினால் எமது கூட்டுறவுத்துறை மேம்பாடடையும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் சுயலாபம் கருதுபவர்கள் பலர் கூட்டுறவினுள் நுழைந்ததாலும் கட்சி அரசியலானது உட்புகுந்ததாலும்கூட்டுறவை அதன் உண்மையான மேம்பட்ட நிலைக்குத் திரும்பவும் கொண்டு வருவது சிரமமாக இருக்கின்றது.

என்றாலும் கூட்டுறவை மேம்படுத்த ஐஊயு எனப்படும் சர்வதேச கூட்டுறவுக் கூட்டமைப்பால் தரப்பட்டிருக்கும் ஏழு விதிகள் உண்டு.

அவையாவன ,

01.கூட்டுறவானது தன்விருப்பார்ந்த தொண்டர் அமைப்பாக விளங்க வேண்டும். சமூக, இன, கட்சி சமய, பால் சார்ந்த பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டதாய் தமது சேவைகளைத் தரக்கூடிய, சங்க உறுப்பினர்களின் நலன்களை மதித்து நடக்கக்கூடிய யாவருக்கும் அது பொதுவாய் விளங்க வேண்டும்.

02.கூட்டுறவு ஜனநாயக அமைப்புக்கள் ஆவன. அவற்றை அங்கத்தவர்களே நடாத்த வேண்டும். கொள்கைகளை வகுப்பதும் தீர்மானங்களை எடுப்பதுமான பொறுப்பு அங்கத்தவர்களையே சார வேண்டும்.

03.கூட்டுறவின் அங்கத்தவரே கூட்டாக அதன் முதலினை உருவாக்கி ஜனநாயக ரீதியில் வழி நடத்த வேண்டும்.

04.கூட்டுறவினர் தன்னாட்சி கொண்ட அங்கத்தவர்களால் நடாத்தப்பட வேண்டும். பிறருடன் உடன்பாடுகள், ஒப்பந்தங்கள் வைத்துத் தமது முதலினை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்தால் அங்கத்தவர்களின் ஜனநாயக அதிகாரத்தையும் கூட்டுறவு தன்னாட்சியையும் மீறாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

05.கூட்டுறவுகள் தமது அங்கர்தவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் உரிய கல்வியையும் பயிற்சியையும் அளித்து அவர்களின் செயற்திறனை மேம்படுத்த முன்வர வேண்டும். கூட்டுறவின் நன்மைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதாய் அவர்கள் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

06.கூட்டுறவு நாட்டின் சகல மட்டங்களிலும் கூட்டாக, அங்கத்தவர்களுக்கு நன்மை தரும்வகையில், நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். கூட்டுறவைப் பலப்படுத்துவதாக நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

07.கூட்டுறவுகள் தமது சமுதாயத்தின் நிலையான அபிவிருத்திக்கு ஏற்றவாறு தமது அங்கத்தவர்களின் கொள்கைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் நடாத்தப்பட வேண்டும்.

ஆகவே கூட்டுறவு சேர்ந்து வாழும் முறைமையைக் கற்றுக் கொடுக்க வல்லது என்பதை இவ்விதிகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். போரினால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் உதாரணத்திற்கு ஜேர்மனி, பிரித்தானியா, டென்மார்க் போன்றவை கூட்டுறவுகளால் போதிய அபிவிருத்தி அடைந்துள்ளன.

அவை எமக்கு முன்னுதாரணங்கள் ஆவன. மக்கள் மட்டத்து ஜனநாயக நிறுவனங்களாக கூட்டுறவுகள்பரிணமித்துள்ளன.

தம்மைத்தாமே ஆளும் முறைமையை கூட்டுறவு மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றது. 2ம் உலகமகா யுத்தம் முடிந்த போது எமது வடபுலத்துத் தேவைகளைக் கூட்டுறவுகளே நிறைவு செய்துவந்தன.

விவசாய உற்பத்தியாளர்கள் கூட்டுறவு,பனை விளை பொருள் கூட்டுறவு, மீனவர் கூட்டுறவு, வைத்தியசாலைகள் கூட்டுறவு, பாடசாலைகள் கூட்டுறவுகள், சிக்கனக்கடன் வழங்கும் கூட்டுறவுகள் என்று பல கூட்டுறவுச் சங்கங்கள் வடமாகாணத்தில் திறம்பட அக்காலத்தில் நடத்தப்பட்டன.

அரசியலானது எமது முழுச்சமுதாயத்தையும் குட்டிச்சுவராக்கிவிட்டது. இடமாற்றங்களும், போரும், அரசியல் உள்ளீடுகளும் கூட்டுறவைச் சீரழித்து விட்டன. இன்று பலர் கூட்டுறவை வைத்துத் தமது அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யப் பார்க்கின்றார்கள்.

கூட்டுறவாளர்களால் நடாத்தப்படும் இந்த மேதினக் கொண்டாட்டம் எமது தமிழ் இனத்திற்கு கூட்டான ஒருமித்த செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக அமையட்டும். நேற்றைய தினந்தான் சகல காணாமற்போனோரின் உறவுகளையும் வடகிழக்கு ரீதியாக ஒன்றுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

இன்று எமது கோரிக்கைகளை வெளிப்படுத்துகின்றேன். எமது காணிகள் எமக்குத் திரும்பக் கையளிக்கப்பட வேண்டும். போர்க்குற்றங்களுக்கு ஆளாகியிருக்கும் இராணுவம் உடனேயே எமது பிரதேசங்களை விட்டு வெளியேற வேண்டும்.

சட்டமும் ஒழுங்கும் பொலிசார் கைகளுக்கு மாற்றப்பட வேண்டும். எமது அரசியல் கைதிகள் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும்.

காணாமற் போனோர் பற்றிய விசாரணைகள் தாமதமின்றி உரியவாறு நடைபெற வேண்டும். இவற்றிற்கான அரசியல் நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.

சுயநலங்கருதாது ஒற்றுமைப்பட்ட ஒன்றிணைந்த அரசியல் நடவடிக்கைகளே எமக்கு வளத்தையும் வாழ்வையும் தரவல்லன.

கூட்டுறவுடன் கூடிவாழப் பழகிக் கொள்வோம். ஆனால் எங்கள் கோரிக்கைகளில் உறுதியாக இருப்போம் எனவும் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.