சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசைக்கான புள்ளிகள் 2014-ம் ஆண்டு மே மாதத்திலும் இருந்தும், 2016-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்தும் கணக்கீடப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 25 சதவீத வெயிட்டேஜ், 2016 மே மாதத்தில் இருந்து 100 சதவீத வெயிட்டேஜ் முறையில் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தென்ஆப்பிரிக்கா நான்கு புள்ளிகள் அதிகம் பெற்று 123 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா புள்ளிகளை இழக்காமலும், பெறாமலும் 118 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா 5 புள்ளிகள் அதிகம் பெற்று 117 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்து 2 புள்ளிகள் பெற்று 115 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு சரிந்துள்ளது.
இங்கிலாந்து 1 புள்ளிகள் பெற்று 109 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. இலங்கை 5 புள்ளிகள் சரிந்து 93 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.
வங்காள தேசம் 1 புள்ளிகள் சரிந்து 7-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 2 புள்ளிகள் சரிந்து 8-வது இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் 4 புள்ளிகள் சரிந்து 79 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் 10-வது இடத்திலும், ஜிம்பாப்வே 11-வது இடத்திலும், அயர்லாந்து 12-வது இடத்திலும் உள்ளது.
இந்த வருடம் செப்டம்பர் மாதம் 30-ந்தேதியுடன் தரவரிசையில் முதல் 8 இடத்தில் இருக்கும் அணிகளே, 2019-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறும். தற்போது வரையில் வெஸ்ட் இண்டீஸ் அணி நேரடியாக தகுதி பெற சிக்கல் ஏற்பட்டுள்ளது. 8-வது இடத்தில் உள்ள பாகிஸ்தானை விட 9 புள்ளிகள் குறைவாக உள்ளது.
செப்டம்பர் 30-ந்தேதிக்குள் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆப்கானிஸ்தான், இங்கிலாந்துடன் விளையாட இருக்கிறது. ஆனால், 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபில் கலந்து கொள்ளவில்லை. இதனால் 8-வது இடத்திற்குள் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னேறுமா? என்பது சந்தேகம்தான்.