ஐ.பி.எல் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் குஜராத் மற்றும் புனே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புனேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற புனே அணியின் கேப்டன் ஸ்மித் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். குஜராத் அணியின் இஷான் கிஷான், மெக்கல்லம் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.
6-வது ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. 24 பந்துகளில் 31 ரன்களை எடுத்த இஷான் ஆட்டமிழந்தார். பின்னர் பேட்டிங் செய்ய வந்த கேப்டன் ரெய்னா 8 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதிரடி வீரர் பின்ச் சொற்ப ரன்களில் வெளியேறினார். பின் வரிசை வீரர்களில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஜடேஜா ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர்.
19.5 ஓவர்களில் குஜராத் அணி 161 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. புனே அணியின் உனத்கண்ட் மற்றும் இம்ரான் தாகிர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, திருப்பதி களமிறங்கினர். ஆனால், குஜராத் வீரர் சங்கவானின் சிறப்பான பந்துவீச்சால் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து புனே அணி தடுமாறியது.
தொடர்ந்து குஜராத் பவுலர்களின் நேர்த்தியான பந்துவீச்சில் புனே அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து அந்த அனி தடுமாறிய போது பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று விளையாடி புனே அணியை வெற்றிப் பாதையில் கொண்டு சென்றார். பின்னர் அதிரடியாக விளையாடிய அவர் சிக்சர்களும், பவுண்டரிகளும் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
அவருக்கு பக்கபலமாக நின்று தோனியும் ரன்களை சேர்க்க புனே அணி வெற்றி இலக்கை நோக்கி சீராக பயணித்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்டோக்ஸ் 63 பந்துகளில் 7 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் சதமடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
19.5 ஓவர்களில் புனே அணி 167 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது. குஜராத் அணி சார்பில் சங்வான் மற்றும் பாசில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.