இவ்வருடத்தில் அரசியல் தீர்வு! பிரதமர் ரணில் நம்பிக்கை

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.

இதன் பிரகாரம் நாட் டின் ஐக்கியத்தை நிலைநாட்டும் முகமாக அரசியல் தீர்வினை இவ்வருடத்தில் பெற்றுக்கொடுக்க முடியும் என நம்புகின்றோம்.

இன்னும் இரு மாதத்திற்குள் புதிய அரசியலமைப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க முடியும்.

குறித்த அறிக்கையை மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகளிடம் முன்வைத்து ஆலோசனை கோருவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 24வது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச நாட்டில் வாழும் ஏழை மக்களின் வறுமையை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு பெரும் பாடுபட்டவராவார்.

தான் ஜனாதிபதி ஆகியதால் நாட்டில் சாதாரண மக்களுக்கும் ஜனாதிபதி ஆக முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனவே நாம் தமிழ் , முஸ்லிம் மற்றும் சிங்களம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் ஜனாதிபதி ஆவதற்கான பலம் எமக்கு இருக்க வேண்டும்.

நாட்டு மக்களுக்காவும் நாட்டுக்காவும் உயிர் நீத்தவரே ரணசிங்க பிரேமதாசவாகும்.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை அவர் முன்னெடுத்திருந்தார்.

இதற்காக ஆயுதம் ஏந்திய , ஏந்தாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

பேச்சுவார்த்தைக்காக ஏன் காலத்தை வீணடிக்கின்றீர்கள் என்று நான் அவரிடம் ஒருமுறை கேட்டேன்.

அதன்போது பேச்சுவார்த்தை நடத்துவதினால் காலம் வீணாகாது. ஒன்று தீர்வு வரும்.

இல்லையேல் தோல்வி அடைந்தாலும் நாம் இருக்கும் நிலையில் இருந்து கீழே செல்லமாட்டோம் எனக் கூறினார்.

எனினும் பயங்கரவாத்தில் ஒரு சிலரே ஈடுப்பட்டிருந்தனர். ஆகையால் பிரேமதாச இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனும் நோக்கில் பாராளுமன்றத்தில் குழு நியமித்து எதிரணியின் ஒருவரை தலைவராக நியமித்தார்.

எனினும் குழுவின் அறிக்கை கிடைக்க முன்னர் உயிரிழந்து விட்டார். அதன் பின்னர் சந்திரிகா அம்மையாரின் ஆட்சியின் போதும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன்பின்னர் எமது ஆட்சி வந்தது. அதன்போது தீர்வினை முன்வைதத்தாலும் விடுதலைப் புலிகள் அதற்கு இணங்கவில்லை. எனினும் யுத்தம் நிறைவடைந்தது.

யுத்தம் நிறைவடையும் என நாம் கனவிலும் நினைக்கவில்லை. எனினும் யுத்தம் நிறைவடைந்தும் சமாதானம் ஏற்படவில்லை. யுத்ததினால் பலர் உயிரிழந்தனர்.

இன்னும் பலருக்கு என்ன நடந்தது என்பது கூட தெரியாது.தற்போது நாம் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

பழி வாங்கல்களை விட்டு அனைவரையும் ஒற்றுமையாக வாழ வைப்பதற்கே நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அரசியல் தீர்வினை வழங்குவதற்கு சர்வதேச ஒத்துழைப்பு எமக்கு மிகவும் அவசியமாகும்.

இதன் காரணமாக சர்வதேசம் எம்மீது அக்கறை கொண்டு இரு வருட கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

நாட்டின் ஐக்கியத்தை நிலைநாட்டும் முகமாக அரசியல் தீர்வினை இவ்வருடத்தில் பெற்றுக்கொடுக்க முடியும் என நம்புகின்றோம்.

இதற்கிணங்க இன்னும் இரு மாதத்திற்குள் புதிய அரசியலமைப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க முடியும்.

குறித்த அறிக்கையை மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகளிடம் முன்வைத்து ஆலோசனை கோருவோம் .

அத்துடன் வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கைக்கு அனைவரும் ஆதரவு நல்க வேண்டும். நாட்டை பிளவு படுத்தாமல் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதே எமது நோக்கமாகும்.

அத்துடன் வடக்கு கிழக்கு மலையகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுப்போம் என்றார்.