திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சன்னியாசி கிராமத்தில் இருக்கிறது கல்யாண சீனிவாச பெருமாள் கோவில். சுமார் 1,600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஆலயம் இது. திருப்பதி வெங்கடாஜலபதி தான் இங்கும் மூலவராக இருக்கிறார். உற்சவர் கல்யாண சீனிவாசர்; தாயார் அலமேலு மங்கை.
இத்தலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வரும் மூலவர் வெங்கடாஜலபதி, திருமலை திருப்பதியில் அமர்ந்து இருப்பதை போலவே இங்கும் அமர்ந்துள்ளார். இதனால் இத்தலம் ‘தென் திருப்பதி’ என்ற சிறப்பு பெயர் பெற்று திகழ்கிறது. சுவாமி, தனது வலது மார்பில் ஸ்ரீதேவியையும், இடது மார்பில் பூதேவியையும் தாங்கியபடி வீற்றிருக்கிறார். மேலும் கையில் சங்கு, சக்கரம், இடுப்பில் சந்திரவம்ச உடைவாளுடன் கூடிய ஒட்டியாணம், மேனியில் சப்தகிரி, லட்சுமி, துளசி, தாமரை, செண்பக மாலைகளை அணிந்திருக்கிறார். திருப்பாதத்தில் தண்டை கொலுசு அணிந்தபடி அற்புத கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
கோவிலின் அர்த்த மண்டபத்தில் அலமேலு தாயார், நின்ற திருக் கோலத்தில் அருள் பாலிக்கிறார். அவருக்கு இடப்புறம் கைகளில் ஆயுதங் களை ஏந்தியபடி, ஆசி வழங்கிய கோலத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் இருக்கிறார்.
பக்தர்கள் ஒரே நேரத்தில், வெங்கடாஜலபதி, அலமேலு தாயார், பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய மூவரையும் வழிபடும் வகையில் ஆலயத்தின் அமைப்பு இருக்கிறது. இது ஒரு சிறப்புக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. சுவாமிக்கு பின்பு வலப்புறம் லட்சுமி, இடப்புறம் ஆண்டாள் ஆகியோர் மதிற்சுவரில் இருந்து அருள்பாலிக்கின்றனர். மூலவர் சன்னிதியின் மேல் உள்ள விமானம் ‘ஆனந்த விமானம்’ என்று அழைக்கப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு அல்லல்படும் மனித இனத்தின் மீது கருணை கொண்ட நாராயணர், சீனிவாசன் என்ற திருநாமம் கொண்டு மனித வடிவில் பூலோகத்திற்கு வந்தார். அப்படி வந்த இறைவன், தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் தங்கினார். தாமிரபரணியில் குடிகொண்டு இருந்த அவரை, யார் என்று அறிந்து கொண்ட முனிவர்கள், மகரிஷிகள், சித்தர்கள், மகாபுருஷர்கள் அனைவரும் தினமும் சென்று சீனிவாச பெருமாளை வழிபட்டு வந்தனர். அவர்களில் சன்னியாசி என்ற ஒருவரும் இருந்தார்.
சுவாமியின் மனித ரூப காலம் முடிவடையும் தருணம் நெருங்கியது. தன் பணி முடிந்து இறைவன் தன் உலகுக்கு சென்று விட்டால், மனித குலம் நற் பயன் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுமே என்ற அச்சம் சன்னியாசிக்கு ஏற்பட்டது. எனவே அந்த சன்னியாசி, நாராயணரை நோக்கி கடுமையான தவம் புரிந்தார். அவரது தவத்தை அறிந்து அவரது வேண்டுகோளுக்கு செவிசாய்த்த நாராயணர், சன்னியாசிக்கு அருள்காட்சி தந்தார். அந்த இடத்திலேயே கோவில் கொண்டு மக்களை காப்பதாக உறுதி கூறினார்.
இவ்வாறு சன்னியாசியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நாராயணர், இத்தலத்தில் வீற்றிருந்து கல்யாண சீனிவாசர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தந்து அருள்புரிந்து வருகிறார். சன்னியாசியின் வேண்டுகோளை ஏற்று நாராயணர் இங்கு அமர்ந்ததால் இந்த இடத்துக்கு ‘சன்னியாசி கிராமம்’ என்ற பெயர் ஏற்பட்டது.
ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருநெல்வேலி ஜங்ஷன், டவுன் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து ஆட்டோக்களில் சென்று வரலாம்.