ஈழ தமிழர்கள் பிரச்சினை.. ஐ.நா.வில் பேசப் போகிறார் மு.க.ஸ்டாலின்!

ஜெனீவாவில் ஜூன் 12ம தேதி நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக சார்பில் வெளியான அறிக்கை: திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் சார்பில், ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் இந்த ஆண்டுக்கான ஐ.நா. அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆண்டில் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து திமுகவும், டெசோ அமைப்பும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானங்கள் ஐ.நா.வில் பதிவாகி அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக திமுக எடுத்து வரும் நிலைப்பாடு உலக அரங்கில் ஆணித்தரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் வரும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 35-வது மனித உரிமைகள் ஆய்வுக் கூட்டத்தில் ஈழ மக்களின் பிரச்சினைகள், விடுதலைக்கான தீர்வுகள் குறித்து மு.க.ஸ்டாலின் உரையாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் உலகளாவிய தமிழர்களிடம் எழுந்துள்ளது. அதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே ஜூன் 12-ஆம் தேதி ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து உலக அரங்கில் ஸ்டாலின் தன் கருத்துகளை முன்வைப்பார்.