வெளிநாட்டவர்களின் மனநிலை மாறிவருகின்றது! க.வி. விக்னேஸ்வரன்

வெளிநாட்டவர்கள் பெரிய நட்சத்திரத் தரத்தில் உள்ள ஹோட்டல்களில்தான் தங்குவார்கள் என்ற நிலை இப்பொழுது மாறிவருகின்றது என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் நகரசபைக்குட்பட்ட கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கீரி சுற்றுலா கடற்கரை இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வடபகுதிக்கு வெளியில் இருந்து வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகள் பலர் வடபகுதியில் சுற்றுலா மையங்கள் எதுவும் இல்லை என்ற நிலையில் சில குறிப்பிட்ட இடங்களை மட்டும் பார்த்துவிட்டு திரும்பி விடுகின்றார்கள்.

இக் குறைபாட்டை வடமாகாணசபை அதன் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்தில் இருந்து அதாவது 2013 பிற்பகுதியில் இருந்து அவதானித்து வந்திருக்கின்றது.

எனினும் அக்காலப் பகுதியில் உடனடியாகக் கவனம் செலுத்தவேண்டிய பல்வேறு வேலைகளின் மத்தியில் சுற்றுலா சம்பந்தமான விடயங்களில் உடனடிக் கவனங்கள் செலுத்த முடியவில்லை.

இருப்பினும், எனது அமைச்சின் கீழ் சுற்றுலாத்துறை என்ற தனியான அலகொன்றினை அமைத்து அதில் சுற்றுலாத்துறை சம்பந்தமான விற்பன்னர்கள் சிலரை வரவழைத்து அமர்த்தி, மீள புதுப்பிக்கக்கூடிய சுற்றுலா மையங்களை அடையாளம் கண்டு, அவற்றை புனரமைத்து மக்கள் பாவனைக்காக பொழுதுபோக்கு மையங்களாக, மாற்றி அமைத்து வருகின்றோம்.

அதன் ஒரு அங்கமாகவே கீரிக் கடற்கரையும் தெரிவு செய்யப்பட்டு எனது அமைச்சின் மாகாணத்திற்கென குறித்து ஒதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதியில் இருந்து 3.19மில்லியன் ரூபா செலவில் இக்கடற்கரை அழகுபடுத்தப்பட்டுள்ளதுடன், அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இப் பகுதியை சிறந்த சுற்றுலா மையமாக மிளிரச் செய்வதற்கு பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. அனைத்து அபிவிருத்திகளும் அரசினாலோ அல்லது வடமாகாண சபையினாலோ நிறைவேற்றப்படமுடியாது.

தனியார் பங்களிப்புக்கள் கிடைக்கப் பெறுகின்ற போது இப்பகுதி விரைவாக முன்னேறும். கடற்கரைக்கு அண்மித்த பகுதிகளில் தனியார் நிலங்களில் சுற்றுலாப் பயணிகள் தங்கக்கூடிய விதத்தில் சுத்தமான சுகாதாரமான சுற்றுலா விடுதிகளை அமைப்பதன் மூலம் சுற்றுலா பயணிகள் சில நாட்கள் இங்கு தங்கியிருந்து அவர்களின் விடுமுறையைக் கழிக்க விரும்புவார்கள்.

அதன் மூலம் வருமானங்கள் அதிகரிக்கும். இப்பகுதியில் குடியிருக்கின்ற சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அது வழிவகுக்கும்.

அதாவது சுற்றுலா பயணிகளுக்கு தேவையான நாளாந்த உணவுகளைத் தயாரித்து வழங்குவது மட்டுமன்றி மன்னார் கடல் உணவுப் பொருட்களில் இருந்து விதம் விதமான உணவுப் பொருட்களைத் தயாரித்து வழங்கலாம். பனை உற்பத்திகள் இங்கு ஏராளம். அவற்றில் இருந்து உணவுகள் தயாரித்து வழங்கலாம்.

கடலில் நீராடுவதற்கு உகந்த ஆடைகள், கறுப்புக் கண்ணாடிகள், நீரில் பாய்ந்து முழுகுவோருக்கு ஏற்ற மூக்குக் கண்ணாடிகள் போன்றவற்றை வியாபாரம் செய்து விருத்தியடையச் சந்தர்ப்பம் உண்டு.

கிழக்கு மாகாணத்தில் அதி விஷேட, விஷேட, சாதாரண தரங்கள் என பல்வேறு விடுதிகள் கடற்கரைகளை அண்டிய தனியார் நிலங்களில் நீட்டிற்கு உருவாக்கப்பட்டுள்ளன.

தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அங்கு தங்கி நீராடல், ஓய்வு பெறல் என நாள் முழுவதும் அவர்கள் அங்கு பொழுதைக் கழிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

வெளிநாட்டவர்கள் பெரிய நட்சத்திர தரத்தில் உள்ள ஹோட்டல்களில்தான் தங்குவார்கள் என்ற நிலை இப்பொழுது மாறிவருகின்றது.

இப்போது அவர்கள் சாதாரண ஒரு சிறிய அறையில் கூட தங்குவதற்கு தயாராக வருகின்றார்கள். இதனால் சுற்றுலாத்துறையில் சாதாரண ஒரு குடும்பம் நாளொன்றிற்கு ரூபா 5000 ரூபாவிற்கு குறையாத வருமானத்தைப் பெறக்கூடிய ஒரு நிலை இன்று காணப்படுகின்றது.

ஆனால் வருபவர்கள் எப்பேர்ப்பட்டவர்கள் என்ன எதிர்பார்ப்புக்களுடன் வருகின்றார்கள் என்பதில் எமது பிரதேச சபைகள் கண்ணுங் கருத்துமாக இருக்க வேண்டும்.

வெறும் பொழுதைக் கழிக்கும் பயணிகளுடன் போதைப் பொருட்களில் ஈடுபாடு காட்டும் பயணிகளும் இங்கு வருகின்றார்கள்.

வெளிப்படைத் தன்மை இல்லை என்றால் நாட்டின் ஏனைய பாகங்களில் நடப்பது போல் சமூகச் சூழல் பாழடைந்து விடும். கலாசார சீரழிவுகள் தலைதூக்கி விடும். சுற்றுலா ஒரு கத்தியின் வெட்டும் பகுதி போன்றது.

நல்லதையும் நடத்துவிக்கலாம். அல்லதையும் ஆக்குவிக்கலாம். மக்களும் எமது அலுவலர்களும் விழிப்பாக இருந்தால் நல்லதையே நாம் எதிர்பார்க்கலாம்.

சுற்றுலா மையங்களை அமைத்து விட்டால் மட்டும் போதாது. அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் பயமின்றி உலா வரக்கூடிய விதத்தில் இப் பிரதேசம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

வெறுமனே குடிப் பழக்கங்களுக்கும், சண்டை சச்சரவுக்குமான இடமாக இதனை மாற்றாது சாதாரண மக்களும் தமது குடும்பத்துடன் வந்து இங்கு அமைக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்திருந்து சுத்தமான கடற்காற்றை சுவாசித்து மகிழ்வுடன் திரும்பக்கூடிய இடமாக மாற்ற வேண்டும்.

வல்வெட்டித்துறை கடற்கரையில் ஒரு சுற்றுலா மையத்தை அண்மையில் திறந்து வைத்தேன். அங்கு கடற்கரையில் வந்து அமர்ந்திருக்கின்ற மக்கள் இனிய பாடல்களையும், செய்திகளையும் செவி மடுக்கக்கூடிய வகையில் வெளிநாடுகளில் வசித்து ஊர்திரும்பியிருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் தமது வீட்டில் இருந்து வானொலிப் பெட்டியில் கிடைக்கின்ற பாடல்களை, செய்திகளை மெல்லிய ஒலியில் கேட்கக்கூடியதாக ஒலி பெருக்கிகளை ஆங்காங்கே அமைத்துக் கொடுத்திருக்கின்றார்கள் என அறிந்தேன்.

மக்களுக்கு இடைஞ்சல் இல்லை என்றால் வரவேற்கத்தக்க முயற்சி. இது போன்று பல முயற்சிகளில் ஈடுபடலாம்.

நாம் சோம்பியிருக்கின்ற ஒரு இனமாக இல்லாது உழைப்பால் உயர்ந்த ஒரு பண்பட்ட சமூகமாக மாற வேண்டும். அதற்கு இறைவன் அருள் புரிவான் என்றார்.