பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி மேதின கூட்டத்தினை நடத்தி முடிந்திருந்தது.
இந்நிலையில் காலிமுகத்திடலில் நேற்று நடத்தப்பட்ட மேதினக் கூட்டத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காலி கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் அரசாங்கத்திற்கு முக்கிய தகவல் ஒன்றை வழங்கியுள்ளதாக வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுடன் விளையாடுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்ற தகவலையே மக்கள் வழங்கியிருந்தார்கள் என வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும கருத்து வெளியிடுகையில்,
இது பாரிய இலக்கமாக இருக்குமா என்ற சாதாரண சந்தேகம் எங்களிடமும் காணப்பட்டது. எனினும் வரலாற்றில் என்றும் முடியாது என கூறப்பட்ட சவாலை அச்சமின்றி ஏற்றுக்கொண்டு மஹிந்த வெற்றி கொண்டார். அதேபோன்று தற்போதும் பாரிய வெற்றியை பெற்றுள்ளார் என குறிப்பிட்டார்.
இதேவேளை கடந்த முதலாம் திகதி நாடாளவிய ரீதியில் நடைபெற்ற மேதின கூட்டங்களில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை தொடர்பாக புலனாய்வுத் தகவல்கள் ஊடாக வெளியிடப்பட்டிருந்தது.
இதன்படி மஹிந்த தலைமையிலான மேதின கூட்டத்தில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர் என தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.