உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காயமடைந்த, நோயுற்ற பசுக்களைக் காக்கும் நோக்கில் ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநிலத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா நேற்று தொடங்கி வைத்தார். பசு சேவைக்காக இலவச தொடர்பு எண்ணும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பொதுமக்களும் அந்த எண்ணை அழைத்து பசுக்களுக்கு உதவ முடியும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை குறித்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, ” உத்தரப்பிரதேச அரசுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என நினைக்கிறேன். முறையான மருத்துவ வசதியின்றி மக்கள் தவித்துவரும் சூழலில், பசு மாடுகளுக்காக ஆம்புலன்ஸ் சேவையை உத்தரப்பிரதேச அரசு தொடங்கியிருக்கிறது. பசு மாடுகளுக்கென சொகுசு படுக்கை அறைகள், பேறுகால விடுப்பு, குளுகுளு பேருந்து வசதி, உல்லாசப் பயணம் போன்றவற்றையும் உத்தரப்பிரதேச அரசு செய்துகொடுக்கும் என நினைக்கிறேன்” என அவர் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சனை குறித்து அவ்வப்போது மார்க்கண்டேய கட்ஜூ தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.