டிரம்ப் அதிரடி எதிரொலி: 10 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு வேலை கொடுக்க இன்போசிஸ் முடிவு!!

அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணிபுரியும் ‘எச்-1பி’ விசா வழங்கும் விதிமுறையை அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு கடுமையாக்கி உள்ளது. அமெரிக்கர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், அமெரிக்காவில் இயங்கும் இந்திய ஐ.டி. நிறுவனங்களான இன்போசிஸ், டி.சி.எஸ். உள்ளிட்டவை ‘எச்-1பி’ விசாவை நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக பயன்படுத்தி விதிமுறை மீறலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதிபர் டிரம்பின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக இன்போசிஸ் நிறுவனம் 10 ஆயிரம் அமெரிக்கர்களை பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் அவர்களுக்கு பணி வழங்க திட்டமிட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவில் மேலும் 4 இடங்களில் தனது தொழில் மையங்களை (அலுவலங்களை) திறக்க முடிவு செய்துள்ளது. அதன் முதல் அலுவலகம் வருகிற ஆகஸ்டு மாதம் இண்டியானாவில் திறக்கப்படுகிறது.

அங்கு 2021-ம் ஆண்டிற்குள் அமெரிக்கர்களுக்கு 2 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்படும். மற்ற 3 அலுவலகங்களை எங்கெங்கு திறப்பது என இன்னும் சில மாதங்களில் முடிவெடுக்கப்படும்.


இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரி விஷால் சிக்கா.

இத்தகவலை இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரி விஷால் சிக்கா தெரிவித்தார். புதிதாக தொடங்கப்படும் அலுவலகங்களில் ஊழியர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மட்டும் கற்றுத்தரப்படாது. வாடிக்கையாளர்களின் நிதி சேவைகள், தயாரிப்பு, சுகாதாரம், எரிசக்தி போன்றவற்றுக்கும் உதவும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்.

புதிதாக பணி நியமனம் செய்யப்படும் 10 ஆயிரம் அமெரிக்கர்களில் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள், பெரிய பல்கலைக்கழகங்களில் சமீபத்தில் படித்து வெளியேறிய பட்டதாரிகள் மற்றும் உள்ளூர் கல்லூரிகளில் படித்தவர்கள் இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

இன்போசிஸ் நிறுவனம் கடந்த 2015 ஆண்டு முதல் அமெரிக்காவில் 1 லட்சத்து 34 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இதற்காக 2500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.