இலங்கை அணியின் முன்னணி கேப்டனாக திகழ்ந்தவர் அர்ஜூனா ரணதுங்கா. இவரது தலைமையில்தான் இலங்கை அணி 1996-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றியது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற அரையிறுதியில் அசாருதீன் தலைமையிலான இந்திய அணியை தோற்கடித்து இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.
தற்போது இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றபோது ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் அர்ஜூனா ரணதுங்கா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் ‘‘இந்திய அணியை வழிநடத்திச் சென்றதில் அசாருதீன்தான் தலைசிறந்த கேப்டன். அவர் ஒரு விவேகமான தலைவர். இந்த நகரத்தில் எனக்கு பிடித்த நினைவுகள் உள்ளன. ஆனால், தற்போதைய இந்த மைதானத்தில் நான் விளையாடியது கிடையாது. ஆனால், பழைய மைதானமான லால் பகதூர் மைதானத்தில் விளையாடியுள்ளேன். இதில் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 90 ரன்கள் குவித்துள்ளேன். அது மிகவும் மகிழ்ச்சியான தருணம்.
சுனில் காவாஸ்கர், சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, திலிப் வெங்சர்க்கார் என இந்தியாவின் ஜாம்பவான்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இவர்கள் அனைவரும் மைதானத்திற்குள் மட்டும்தான் எதிரிகள். மைதானத்திற்கு வெளியே சிறந்த நண்பர்கள். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும், அவர்களுடன் நீண்ட வருடங்களாக நண்பர் என்ற தொடர்பில் இருந்துள்ளேன்’’ என்றார்.