இந்திய ராணுவ வீரர் ஒருவரின் தலை வெட்டப்பட்டால் அதற்கு பதிலாக பாகிஸ்தான் வீரர்கள் 100 பேரின் தலைகளை வெட்ட வேண்டும் என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் பதஞ்சலி நிறுவனமும் டூத்பேஸ்ட், தேன், நூடுல்ஸ், கூந்தல் தைலம், சமையல் எண்ணெய், சோப், உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி சந்தைப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பதஞ்சலி நிறுவன தயாரிப்பு பொருட்கள் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய பாபா ராம்தேவ், பாகிஸ்தான் ராணுவத்தினர் நமது வீரர்கள் தலையை வெட்டி சிதைக்கின்றனர். அதற்கு நாம் இஸ்ரேல் வழியில் 100 பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் தலையைக் வெட்ட வேண்டும் என்று கூறினார்.
மேலும், பதஞ்சலியின் உற்பத்தி திறன் தற்போது ரூ 30,000 கோடியாக உள்ளது. அடுத்த ஆண்டு உற்பத்தித் திறன் ரூ.60,000 கோடியாக அதிகரிக்கும் என்றதோடு, மஹாத்மா காந்தி, சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் கூறியது போல் அயல்நாட்டுப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. சீனப்பொருட்களை நாம் புறக்கணிக்க வேண்டும் என்றும் ராம்தேவ் கூறினார்.
கோல்கேட், யுனிலீவர், புராக்டர் அண்ட் காம்பிள் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மறைமுகமாக சுமார் 50 லட்சம் கோடி முதலீட்டை வைத்துள்ளன என்று குற்றம்சாட்டிய அவர், பிரதமர் மோடியின் ரத்தத்தில் தேசபக்தி ஊறியிருக்கிறது என்றும் தெரிவித்தார்.