மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் வெளியானர் அது பாகுபலி படத்தை விட அதிக பார்வையாளர்களை சென்றடையும் என்பது சந்தேகமில்லை. ஆனால் அதன் உண்மைத்தன்மை குறித்துதான் சந்தேகம் எழுகிறது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது. 6ஆம் தேதி அவரை எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்தனர்.
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும், அவரது மரணம் பற்றியும் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு சிபிஐ விசாரணை கேட்டு வருகின்றனர்.
அதிமுகவின் தொண்டர்கள் முதல் அமைச்சர்கள் வரை அனைவருக்குமே ஜெயலலிதாவின் மரணம் பற்றிய மர்மம் பற்றிய சந்தேகம் உள்ளது. அந்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் சசிகலா, இளவரசிக்கு மட்டுமே உள்ளது.
ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த போது பல புகைப்படங்கள் வெளியாகின அவை போலியானவை என்று அதிமுகவினரால் வெளியிடப்பட்டது. ஆனால் உண்மையான புகைப்படங்களை எந்த நேரத்திலும் சசிகலா தரப்பினர் வெளியிட தயாராக இல்லை.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரம் உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு இளவரசியின் மகன் விவேக் கூறியிருந்தார்.
இதே போல மதுரை நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்படும் என்று கூறி அதிர வைத்துள்ளார்.
ஜெயலலிதா புகைப்படம் வெளியானால் பலரது முகத்திரை கிழியும். புகைப்படத்தை வெளியிடுவதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறோம். சரியான நேரத்தில் வெளியிடப்படும். மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சையே அளிக்கப்பட்டது. சிகிச்சையின்போது உடனிருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது சிபிஐ விசாரணை கேட்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவை வைத்தே அரசியல் செய்கிறார்கள். சதி செய்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே அந்த புகைப்படங்களை விரைவில் வெளியிட இருக்கிறோம் என்று கூறியுள்ளார். ஆனால் யாருடைய அனுமதிக்காக காத்திருப்பதாக கூறவில்லை.
ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்கட்சியினர் கோரினர். டிராபிக் ராமசாமி உள்ளிட்ட பலர் வழக்கு போட்டார்கள். ஆனால் சசிகலா ஊடகங்களை சந்திக்க வில்லை.
புகைப்படம் பற்றி மூச்சு கூட விடவில்லை. அப்போதெல்லாம் உடனிருந்த ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் ஒரே ஒரு புகைப்படத்தை வெளியிடுங்கள் உங்களை நம்புகிறோம் என்று சசிகலாவிடம் கேட்கவில்லை. மருத்துவர்கள் சொன்னதையே நம்பினோம் என்று இப்போது கூறுகிறார் ஓ.பன்னீர் செல்வம்.
ஜெயலலிதா சிகிச்சையின்போது போட்டோ எடுக்கவில்லை என்று பலமுறை கூறியுள்ளனர். இந்த நிலையில் திடீரென்று ஜெயலலிதா சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இருப்பதாகவும் அதை விரைவில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவிற்கு அவரது சிகிச்சை புகைப்படங்கள் வெளியாவதில் விருப்பமில்லை.ஆகையால் அவற்றை வெளியிடவில்லை. இப்போது அவற்றை வெளியிட வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறார் சசிகலா. ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், மருத்துவர்களோடு உரையாடுவது, சசிகலாவிடம் பேசுவது உள்பட அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இதனை கூடிய விரைவில் விவேக் அதை வெளியிடுவார் என்கின்றனர்.
சிகிச்சை பெற்ற புகைப்படங்கள் சசிகலாவிடம் மட்டுமில்லை. அப்போலோ நிர்வாகத்திடமும் சிகிச்சை நடந்ததிற்கான அத்தனை வீடியோக்களும்புகைப்படமும் இருக்கிறது.தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் வெளியிட தயாராக இருப்பதாக ஏற்கனவே அப்போலோ நிர்வாகம் அறிவித்திருந்தது. மிக விரைவில் ஜெயலலிதா குறித்த சிகிச்சைப்படங்கள் வெளியிடப்படும் என்கிறார் சசிகலா அனுதாபி ஒருவர்.
இந்த படங்கள் வெளியானால் அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல சிபிஐ விசாரணை கேட்கும் ஓபிஎஸ் அணியினரின் சந்தேகமும் தீரும். ஆனால் இந்த புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் பாகுபலி படத்தை மிஞ்சும் வகையில் இருக்கும் என்கின்றனர். எது உண்மையோ? ஜெயலலிதாவின் ஆன்மாவிற்கே வெளிச்சம்.