சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா கட்டாயம் பங்கேற்க வேண்டும்: டிராவிட், தெண்டுல்கர் உள்பட முன்னாள் வீரர்கள் கருத்து

ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்க தகுதி பெற்றன.

இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்களது அணி வீரர்களை ஏப்ரல் 25-ந்தேதி (கடந்த மாதம்)க்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. இறுதி கெடு விதித்திருந்தது. ஐ.சி.சி.யின் லாபம் பங்கீடு விகிதத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதில் இந்தியாவின் வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அத்துடன் நாளைமறுநாள் (மே 7-ந்தேதி) தொடங்கும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து பதில் அளிக்கிறோம் என்று கூறப்பட்டது.

ஐ.சி.சி.யின் காலக்கெடு முடிவடைந்து விட்டதால், இந்தியா தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்றும், இந்திய கிரிக்கெட் வாரியத்தால் புறக்கணிக்கப்படலாம் என்றும் கூறப்டுகிறது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபில் இந்தியா கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று டிராவிட், சச்சின் தெண்டுல்கர் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். அத்துடன் ஜாகீர் கான், குண்டப்பா விஸ்வநாத், சந்தீப் பட்டீல், சஞ்செய் மஞ்ரேக்கர், ஆகாஷ் சோப்ரா, அஜித் அகர்கர், வெங்கடேஷ் பிரசாத், சபா கரிம், முரளி கார்த்திக், தீப் தாஸ் குப்தா ஆகியோரும் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.