ஐ.சி.சி-க்கும், பிசிசிஐ-க்கும் இடையிலான பிரச்சினை காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த மாதம் 25-ந்தேதிதான் இறுதிக் கெடு. இருந்தாலும் இந்தியா அணி அறிவிக்கவில்லை. இதனால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்குமா? என்ற சந்தேகம் எழுந்து கொண்டிருக்கிறது.
நாளுக்கு நாள் இந்த சந்தேகம் அதிகரித்து வருகிறது. முன்னாள் வீரர்கள் அனைவரும் இந்தியா இந்த தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழு இன்று பிசிசிஐ-க்கு ஒரு இ-மெயில் அனுப்பியுள்ளது. அதில் ‘‘இந்திய கிரிக்கெட் அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்ளாது என யூகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதற்கு விரைவில் முடிவு கட்டுங்கள்.
இந்திய அணியை ஏப்ரல் 25-ந்தேதிக்குள் நாம் அணிந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை நாம் அணி வீரர்களை அறிவிக்கவில்லை என்பதை நாம் அறிவோம். தயவு செய்து தேர்வுக்குழுவை கூட்டி இந்திய அணியை உடனடியாக அறிவியுங்கள். பிசிசிஐ-யின் சட்டஉரிமைக்கு எந்தவித குந்தகம் இல்லாமல் ஐ.சி.சி. இந்திய வீரர்களின் பட்டியலை அறிவிக்க முடியும்’’ என்று கூறப்பட்டுள்ளது.