இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி. இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது இவருக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன்பின் இந்திய அணியில் அவர் பகேற்கவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தரம்சாலா டெஸ்டிற்காக இந்திய அணியில் இணைந்திருந்தார். ஆனால், ஆடும் லெவனில் விளையாடவில்லை.
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் மொகமது ஷமி டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற சன்ரைசரஸ் அணிக்கெதிராக 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். 21 பந்தில் 30 ரன்கள் எடுத்திருந்த வார்னரை யார்க்கர் மூலம் வீழ்த்தினார். இதன்மூலம் தனது உடற்தகுதியை மொகமது ஷமி நிரூபித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்திய அணி அறிவிக்கப்படும்போது, மொகமது ஷமி தானாகவே தேர்வு செய்யப்படுவார் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
மேலும் இகுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘மொகமது ஷமி உடற்தகுதி பெற்று நல்ல நிலைமையில் இருந்தால், தானாகவே இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவார். இதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் வார்னருக்கு வீசிய பந்து, மிகச் சிறந்த பந்துகளில் ஒன்று’’ என்றார்.