யாழில் சிறுபோக வெங்காயச் செய்கை ஆரம்பம்!

யாழ். வலிகாமம் பிரதேசத்தில் பரவலாக சிறுபோக வெங்காயச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஒரு அந்தர் விதை வெங்காயம் மூவாயிரம் ரூபாவிற்குக் கொள்வனவு செய்யப்பட்டு விவசாயிகளால் நடுகை செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடமும் ஒரு அந்தர் விதை வெங்காயம் பத்தாயிரம் ரூபாவிற்கே கொள்வனவு செய்யக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வடமராட்சியின் பருத்தித்துறை, கொம்மாந்துறை, தம்பசிட்டி, திக்கம், வதிரி, மந்திகை ஆகிய பகுதிகளில் தாம் சிறு போக வெங்காயச் செய்கைக்குத் தேவையான விதை வெங்காயங்களை வழமையாகக் கொள்வனவு செய்து நடுகை செய்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

கடந்த வருட இறுதியில் குறித்த பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளமையே விதை வெங்காயங்களின் விலை உயர்விற்குக் காரணமெனவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, சிறு போக வெங்காயச் செய்கை மூலம் இரண்டரை மாதங்களில் தம்மால் பயன் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வலிகாமம் பிரதேசத்தில் ஏழாலை, குப்பிளான், ஈவினை,புன்னாலைக்கட்டுவன், வசாவிளான், குரும்பசிட்டி, மல்லாகம், மயிலங்காடு,சுன்னாகம், மருதனார்மடம், ஊரெழு, உரும்பிராய், கோண்டாவில், கோப்பாய், இருபாலை, நீர்வேலி, அச்செழு, புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாகச் சிறு போக வெங்காயச் செய்கை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.