உலக வங்கியின் மூலம் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் மேலும் பல மாவட்டங்களுக்கு விஸ்த்தரிக்கப்பட வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
உலக வங்கி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் தொடர்பாக அதன் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல், நேற்று(04) இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது.
உலக வங்கியின் சார்பில் பிராந்திய நீர் மற்றும் சுத்திகரிப்பு ஏற்பாட்டு சிரேஷ்ட நிபுணர் லயின் மேன்சிசஸ், நீர் மற்றும் சுத்திகரிப்பு ஏற்பாட்டு நிபுணர் மத்தியூஸ் முல்லாகல், அமைச்சின் செயலாளர் சரத் சந்தசிறி விதான, மேலதிக செயலாளர் ஏ.சி.எம். நபீல் மற்றும் கருத்திட்ட பணிப்பாளர் ரணதுங்க ஆகியோர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிலையில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
உலக வங்கியின் மூலம் பல பாரிய வேலைத்திட்டங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப் படுகின்றன.
ஏழு மாவட்டங்களை மையப்படுத்தி சமூக அடிப்படையில் செயற்படுகின்ற குடிநீர்த் திட்டங்களுக்கான மேலதிக முதலீடுகள், அதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குகின்ற முயற்சி மற்றும் நகரமயப்படுத்தப்பட்ட சில பிரதேசங்களின் குடிநீர் தேவைப்பாடு போன்ற பல விடயங்களில் உலக வங்கி திட்டத்தின் தலையீடு சிறப்பான நிலையில் காணப்படுகிறது.
இதே வேளை மலசலகூட வசதிகள் இல்லாத மாவட்டங்களில் அவற்றை உலக வங்கி மூலம் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
2030 ஆம் ஆண்டு சகலருக்கும் மலசலகூடங்களை பெற்றுக்கொடுக்கும் சர்வதேச நியமம் இருந்தாலும் அதற்கு பத்து வருடங்களுக்கு முன்னரே நாங்கள் அந்த எல்லையை தாண்டிவிடலாம் என்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
மேலும் உலக வங்கியின் சிறப்பான செயற்திட்டங்களால் இவற்றை எம்மால் சாதித்துக்கொள்ள முடியுமென தாம் நம்புவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.