காஞ்சீபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனிக்கோவில் உள்ளது. இது பரிகார தலமாகவும் விளங்குகிறது. வலதுகையில் எழுத்தாணியும், இடதுகையில் ஓலைச்சுவடியும் தாங்கிய எழிலார்ந்த உருவத்தோடு அருள் புரிகிறார். இங்கு கலியுகத்துக்கு முன்னதாகவே சித்ரகுப்தர் எழுந்தருளி உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. சித்ரகுப்தரை வணங்குவதால் கேது தோஷம், கல்வி தோஷம், புத்திர தோஷம் உள்ளிட்ட சர்வ தோஷங்களும் நீங்கும்.
ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் நமது பாவ, புண்ணியங்கள் அனைத்தும் சித்ரகுப்தரால் எழுதப்படுகிறது என்கிறார்கள். எனவே சித்ரா பவுர்ணமி அன்று சித்ரகுப்தரை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சித்ரா பவுர்ணமி அன்று காலை விரதத்தை தொடங்கி ‘சித்ரகுப்தாய நம’ என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். மாலையில் பவுர்ணமி நிலவு உதயமானதும் வீட்டில் விளக்கேற்றி சித்ரகுப்தருக்கு பூஜை செய்யவேண்டும். வெண்பொங்கல், இனிப்பு கொழுக்கட்டை, மாங்காய், தட்டைப்பயறு குழம்பு இவைகளுடன் நீர் மோர், பழங்கள், இளநீர், பலகாரங்கள் படைக்கவேண்டும். பிறகு ஏழைகளுக்கு முடிந்த அளவுக்கு தானம் செய்யவேண்டும்.
பேனா, பென்சில், நோட்டு ஆகியவற்றை படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும். பயத்தம்பருப்பும், எருமைப்பாலும் கலந்த பாயாசத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். பின்னர் உப்பு சேர்க்காமல் ஆகாரம் உண்டு விரதமிருந்தால் சித்ரகுப்தர் மனம் மகிழ்ந்து நம் பாவ கணக்குகளை குறைப்பார். இந்த விரதம் இருப்பவர்களுக்கு எமபயம் இருக்காது. சித்ரகுப்தரிடத்தில் மலையளவு பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்ளும்படி பிரார்த்திக்க வேண்டும். நவக்கிரகங்களில் கேதுபகவானின் அதிஷ்டானதேவதை ஸ்ரீ சித்ரகுப்தரே ஆவார். கேதுபகவானால் ஏற்படக்கூடிய கெடுபலன்கள் நீங்கிட சித்ர குப்தரை வழிபடவேண்டும்.
கேது பகவானுக்கு பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் சித்ரகுப்தரை வழிபடுவதோடு கேது பகவானுக்கு உகந்த கொள்ளு தானியத்தில் வடை அல்லது சுண்டல் செய்து புளியோதரையுடன் நைவேத்தியமாக படைத்து கேது பகவான் தோத்திரப்பாடலை பாடி செங்கரும்பு நிற மலர்களை கொண்டு அர்ச்சனை செய்யவேண்டும்.