இந்தியாவிலும் ‘ஹாலிவுட்’ தரத்தில் படங்கள் எடுக்கமுடியும் என்பதை ‘பாகுபலி-2’ மூலம் இயக்குனர் ராஜமௌலி நிரூபித்திருக்கிறார். இந்தியாவில் அதிக வசூல் என்றால் அந்த தகுதி இந்தி படங்களுக்கு மட்டும்தான் உண்டு என்று கூறப்பட்டது.
இந்தி பட நாயகர்கள் ஷாரூக்கான், சல்மான்கான், அமீர்கான் படங்களுக்கு தனிமவுசு உண்டு. இவர்கள் நடித்த படங்கள் வசூலில் சாதனை படைக்கும். இந்தி படங்கள்தான் ஒருசில நாட்களில் ரூ.100 கோடி வசூலை தொடும் என்று கூறப்பட்டு வந்தது.
‘பாகுபலி-2’ அந்த சாதனைகளை முறியடித்து விட்டது. இந்தியில் மட்டுமே 3 நாளில் பாகுபலி ரூ.127 கோடி வசூலித்து இந்திபட உலகை கலக்கம் அடைய வைத்துள்ளது. ‘தங்கல்’ படம் 3 நாளில் ரூ.106 கோடி வசூலித்தது. ‘பாகுபலி-2’ அந்த சாதனையை உடைத்து எறிந்து இருக்கிறது.
இந்தி படங்கள் தான் ரூ.500 கோடி வசூலை தொட முடியும் என்ற நிலை முன்பு இருந்தது. இப்போது ‘பாகுபலி-2’ ஆயிரம் கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தென் இந்திய மொழி படமான ‘பாகுபலி-2’ சரித்திர சாதனை படைத்து வருவதால், இந்திபட உலகின் பிரபல ஹீரோக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்தி பட ஹீரோக்களுக்கு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்படுகிறது. படப்பிடிப்பு மற்றும் தொழில் நுட்பங்களுக்கு குறைந்த அளவே செலவு செய்யப்படுகிறது. ஆனால் ‘பாகுபலி-2’ படத்தில் நடிகர், நடிகைகளுக்கு கொடுத்த சம்பளம் மொத்த தயாரிப்பு செலவை ஒப்பிடும்போது மிக குறைவு. ஒரு இந்தி படத்தை ரூ.300 கோடிக்கு தயாரிக்க திட்டமிட்டால் பெரிய ஹீரோக்கள், ஹீரோயின்களுக்கே ரூ.200 கோடி சம்பளமாகவும் மற்ற செலவுகளுக்கும் கொடுக்க வேண்டியது வரும்.
‘பாகுபலி-2’ படத்தில் அதன் படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகளுக்குத்தான் மொத்த பணத்தில் பெரும் பகுதி செலவிடப்பட்டது. இந்தி பட உலகில் இது சாத்தியம் இல்லை. எனவே இதுபோன்ற பிரமாண்ட படங்கள் இந்தியில் தயாராக வாய்ப்பே இல்லை. இதுபோன்ற படத்தை இந்தியில் எடுத்தால் இதைவிட 4 மடங்கு செலவு செய்தாலும் இந்த பிரமாண்டத்தை கொண்டு வர முடியாது என்று திரை உலக பிரமுகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.