இணைப்பு பேச்சு வார்த்தை தோல்வி: இரட்டை இலை யாருக்கு? ஓ.பி.எஸ்.- எடப்பாடி பழனிசாமி பலப்பரீட்சை

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் இன்னும் ஏக்கமாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு கட்சியையும், ஆட்சியையும் தன்வசப்படுத்தி வைத்திருந்த ஜெயலலிதா அடிமட்ட தொண்டர்களை மட்டுமின்றி அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளையும் வசப்படுத்தி வைத்திருந்தார். இதுவே அவரது ஆளுமை திறனுக்கு சிறந்த உதாரணமாக பார்க்கப்பட்டது.

இதனால் அவர் உயிருடன் இருந்தவரை அ.தி.மு.க. கட்டுக்கோப்பான இயக்கமாகவே இருந்தது.

கட்சியில் ஜெயலலிதாவின் இழப்பை ஈடுகட்டும் எண்ணத்தில் களம் இறங்கிய சசிகலாவின் அரசியல் பயணம் தொடங்கும் முன்னரே முடிந்து போனது. அவரது வாரிசாக முன் நிறுத்தப்பட்ட டி.டி.வி.தினகரனாலும் அரசியலில் மீண்டும் ஜொலிக்க முடியவில்லை.

பெரியகுளம் தொகுதி முன்னாள் எம்.பி.யாக மட்டுமே அறியப்பட்டவர், ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் அ.தி.மு.க. தலைமை பொறுப்புக்கே வந்தார். ஆனால் அவரால் கட்சியை வழிநடத்திச் செல்ல முடியவில்லை. முடங்கிப்போன இரட்டை இலை சின்னத்தால் டி.டி.வி.தினகரனும் முடங்கி போனார்.

சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஓ.பி.எஸ். போர்க்கொடி தூக்கியதால் இரண்டாக உடைந்த அ.தி.மு.க. தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க. அம்மா அணி, அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி என 2 அணிகளாக அ.தி.மு.க.வினர் செயல்பட்டு வருகிறார்கள்.

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 2 அணிகளும் வெவ்வேறு சின்னங்களிலேயே போட்டியிட்டன.

இந்த தேர்தல் முடிவு அ.தி.மு.க. தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தல் ரத்து அதற்கான வாய்ப்பை பறித்து விட்டது.

இதன் பின்னர் 2 அணிகளும் இணைவதற்கான சூழல் ஏற்பட்டது. ஆனால் பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட சுணக்கம்… முடக்கமாகவே மாறிப்போனது.

இதனால் 2 அணிகளும் எதிரும்-புதிருமாக போவதற்கு தயாராகிவிட்டன. தொண்டர்களின் செல்வாக்கை பெறுவதற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பலப்பரீட்சைக்கு தயாராகி விட்டனர். இருவரும் போட்டி போட்டு அ.தி.மு.க. தொண்டர்களை சந்தித்து வருகிறார்கள்.

முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கும் இரு அணிகளும் சத்தமில்லாமல் காய் நகர்த்தி வருகின்றன.

எம்.ஜி.ஆர். உருவாக்கிய இரட்டை இலை சின்னமே அ.தி.மு.க.வின் மிகப்பெரிய பலமாகும். அக்கட்சியின் வெற்றிச் சின்னமாக பார்க்கப்படும். இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் முட்டி மோதி வருகிறார்கள்.