முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் யுனெஸ்கோவின் ஏற்பாட்டில் நடைபெற்ற வெசாக் பண்டிகையில் கலந்து கொள்வதற்காக சென்ற செலவு 25 மில்லியன் என வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் பொழுதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு பாரிஸ் சென்ற பொழுது சிராந்தி ராஜபக்சவின் ஹோட்டலுக்கு வழங்கிய தொகை குறித்தும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, சிராந்தி தங்கியிருந்த ஹோட்டலின் அறை ஒன்றுக்கு ஒரு நாள் வாடகையாக, 63, 945.50 யூரோ என்றும், இவர்களின் உறவினர்களுக்கு 6, 924 யூரோ என்றும் குறிப்பிட்ட அவர், ஒரு நாளைக்கு மட்டும் இவர்கள் 1, 350 யூரோ செலவு செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இவர்களுக்காக மினி பார் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அதற்கு நாள் ஒன்றுக்கு 970 யூரோ என்றும், தொலை பேசி அழைப்புக் கட்டணம் 1, 200 யூரோ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தையும் அன்றைய ஆட்சியில் இருந்த அரசாங்கம் தான் வழங்கியிருக்கிறது என்றும் அவர் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.