அமெரிக்க ஜனாதிபதியான பின்னர் டொனால்டு ட்ரம்ப் மேற்கொள்ளவிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயண அட்டவணை தயாராகியுள்ளது. அதன்படி இஸ்ரேல், வாடிகன், சவுதி அரேபியாவுக்கு அவர் செல்லவிருக்கிறார்.
இத்தாலியில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே அவர் இந்தப் பட்டியலில் உள்ள இடங்களுக்குச் செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் ட்ரம்பின் வெளிநாட்டுப் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக நேற்று ஜனாதிபதி ட்ரம்ப் பாலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது தொடர்பாக அந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதன் பின்னரே தனது முதல் வெளிநாட்டுப் பயணத்துக்காக ட்ரம்ப் இஸ்ரேலை தெரிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
பழைய அட்டவணையில் ட்ரம்ப் பெல்ஜியம், இத்தாலி செல்வார் என்றே குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது முதல் வெளிநாட்டுப் பயண அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.