ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி குஜராத்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது.
பெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய குஜராத் லயன்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது.
கேப்டன் ரெய்னா 43 பந்தில் 77 ரன்னும் (5 பவுண்டரி, 4 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 34 பந்தில் 65 ரன்னும் (5 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். கும்மின்ஸ், ரபடா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
பின்னர் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரிஷப்பான்டின் அதிரடியான ஆட்டத்தால் 209 ரன் இலக்கை டெல்லி அணி எளிதில் எடுத்தது. அவர் 43 பந்தில் 97 ரன் (6 பவுண்டரி, 9 சிக்சர்), சாம்சன் 31 பந்தில் 61 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர். இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 10.1 ஓவர்களில் 143 ரன் எடுத்தனர்.
டெல்லி அணி பெற்ற 4-வது வெற்றியாகும். இந்த வெற்றி குறித்து அந்த அணியின் தற்காலிக கேப்டன் கருண்நாயர் கூறியதாவது:-
எங்கள் அணி வீரர்களின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் சிறப்பாக இருந்தது. சாம்சனும், ரிஷப்பான்டும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இது மாதிரியான ஜோடியின் ஆட்டத்தை நான் பார்த்தது இல்லை. இருவரும் பயப்படாமல் இயல்பான ஆட்டத்தை ஆடினார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
குஜராத் லயன்ஸ் பெற்ற 8-வது தோல்வியாகும். இதன்மூலம் அந்த அணி ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை இழந்து வெளியேற்றப்பட்டது. இந்த தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ரெய்னா கூறியதாவது:-
208 ரன் என்பது நல்ல ஸ்கோர் தான். பந்துவீச்சு நன்றாக அமையாததால் தோல்வி அடைந்தோம். பழைய பந்தில் வீசக்கூடிய அனுபவம் வாய்ந்த பவுலர்கள் இல்லை. ரிஷப்பான்ட் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை மாற்றிவிட்டார். அவர் மிகவும் சிறப்பாக விளையாடினார். அவரது நாளாக இந்த ஆட்டம் அமைந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.