ஐ.பி.எல். தொடரில் கடைசி போட்டிகளை வெற்றிகளோடு முடிக்க விரும்புகிறோம்: டி வில்லியர்ஸ் சொல்கிறார்

ஐ.பி.எல். சீசன் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர் தோல்விகளை சந்தித்து, லீக் சுற்றோடு வெளியேற உள்ளது. 11 ஆட்டங்களில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிகள் மற்றும் ஒரு டிரா ஆகியவற்றின் மூலம் ஐந்து புள்ளிகள் பெற்று கடைசி இடம் வகிக்கிறது.

விராட் கோலி, டி வில்லியர்ஸ், கெய்ல் என நட்சத்திர வீரர்கள் பட்டாளம் நிறைந்த பெங்களூரு அணி படுதோல்வியை சந்தித்து இருப்பது அந்த அணியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக, அந்த அணியின் நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ், கடைசியாக உள்ள மூன்று போட்டிகளில், ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் செயல்படுவோம் என தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் டி வில்லியர்ஸ் கூறியிருப்பதாவது:- “ஐ.பி.எல். தொடரை சில நல்ல முடிவுகளுடன் முடிக்க விரும்புகிறோம். இன்று இரவு சின்னசாமி மைதானத்தில் ரசிகர்களை நிச்சயம் உற்சாகப்படுத்துவோம் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சந்திக்கிறது.