11 ஆட்டங்களில் 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 13 புள்ளிகள் பெற்றுள்ள ஐதராபாத் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட முடியும். இந்த சீசனில் சொந்த ஊரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி ஐதராபாத் தான். இங்குள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்துள்ள 5 ஆட்டங்களிலும் அந்த அணியே வெற்றி பெற்றிருக்கிறது.
“ஒவ்வொரு அணியும் உள்ளூரிலும் முடிந்த வரை அதிக ஆட்டங்களில் வெற்றி பெற முயற்சிக்கும். அந்த வகையில் நாங்கள் இந்த மைதானத்தை எங்களது கோட்டையாக மாற்ற முயற்சிக்கிறோம்’ என்று ஐதராபாத் கேப்டன் வார்னர் கூறியிருக்கிறார்.
புனே அணி 11 ஆட்டங்களில் 7-ல் வெற்றி கண்டு 14 புள்ளிகளை சேகரித்துள்ளது. தொடக்கத்தில் தடுமாறினாலும் சரியான நேரத்தில் உச்சக்கட்ட பார்முக்கு வந்துள்ள புனே அணி கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி பக்கமே சென்றதில்லை. இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடினால் முதல் முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்து விட முடியும்.
ஆனால் ஐதராபாத் அணியில் ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ள டேவிட் வார்னர் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 489 ரன்), ஷிகர் தவான், வில்லியம்சன், யுவராஜ்சிங், ஹென்ரிக்ஸ் என்று அதிரடி சூரர்கள் அணிவகுத்து நிற்பதால், புனே பந்து வீச்சாளர்களுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. ஐதராபாத்தின் கோட்டையை ஸ்டீவன் சுமித் படையினர் தகர்ப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.