முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாததாலேயே அவருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பிலிருந்து 42 பேர் விலக்கப்பட்டுள்ளனர் என சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற அமர்வின் போது அமைச்சர் கருத்து வெளியிட்டார். இதன் போது மஹிந்த அணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
மஹிந்தவுக்குக் கடும் உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது. அவர் கொலை செய்வதற்கு முயற்சிக்கப்படுகின்றது” என்று மஹிந்த அணி எம்.பியான விமல் வீரவன்ஸ எம்.பி. சுட்டிக்காட்டினார்.
26 விசேட அதிரடிப்படையினர் உட்பட 187 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவருக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியில் இருக்கின்றனர் என இதன்போது அமைச்சர் சாகல குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது தொடர்பில் விமல் வீரவன்ச எம்.பி. ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும்போதே சட்டம், ஒழுங்கு அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதி முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளானது அச்சுறுத்தல்கள் பற்றிய மதிப்பீட்டு அறிக்கையின் பிரகாரமே மேற்கொள்ளப்படும்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புகளைப் பொறுத்தவரையில், ஜே.ஆர். ஜயவர்தன 1988ஆம் ஆண்டு பதவியில் இருந்து ஓய்வுபெறும் போது 65 உத்தியோகஸ்தர்கள் அவரது பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், 1996ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மரணிக்கும்போது அது 18 ஆக குறைந்திருந்தது.
டி.பி. விஜேதுங்க 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் போது அவருக்கு 78 பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அமர்த்தப்பட்டிருந்ததுடன், அவர் மரணிக்கும் போது அது 12 ஆகக் குறைவடைந்திருந்தது.
அடுத்ததாக 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும்போது அவரது பாதுகாப்புக்கு 198 இராணுவ மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வழங்கப்பட்டிருந்தனர். பின்னர் பாதுகாப்புத் தரப்பினரின் குழுவொன்றில் ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய அவரது பாதுகாப்பு 12 இராணுவம் மற்றும் 69 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் போதும் என்று
பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்புக்கு 59 பேர் இருக்கின்றனர்” –என்றார்.
அத்துடன், கோரிக்கைகளுக்கு அமைய அதிமுக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவதாகக் கூறிய அவர், ஜயம்பதி விக்கரமரட்ன எம்.பி. மற்றும் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோரின் பாதுகாப்புகள் அவ்வாறு அதிகரித்து
வழங்கப்பட்டிருப்பதை அதற்கான உதாரணங்களாகவும் சுட்டிக்காட்டினார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பு பற்றி விளக்கமளித்த சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்,
“மஹிந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும்போது அவரது கோரிக்கைக்கு அமைய 102 இராணுவத்தினரும் 103 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் அவரது பாதுகாப்புக்கென வழங்கப்பட்டிருந்தனர். எனினும், அதிமுக்கிய பிரமுகர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்குவது என்ற கொள்கைத் தீர்மானமொன்றை எமது அரசு எடுத்தது.
அதற்கமைய, மஹிந்தவின் பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்து 100 இராணுவத்தினர் திரும்ப பெறப்பட்டு அவர்களுக்கு பதிலாக அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 100 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வழங்கப்பட்டனர். அதற்கு மேலதிகமாக 26 விசேட அதிரடிப்படையினரும் அவரது பாதுகாப்புக்கென வழங்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு மொத்தமாக 229 உத்தியோகஸ்தர்கள் வழங்கப்பட்டிருந்தனர்.
எனினும், தற்போது அதிலிருந்து 42 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீள அழைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு திரும்ப அழைக்கப்பட்டவர்களில் விசேட அதிரடிப்படையினர் உள்ளடங்கவில்லை. எப்படியிருப்பினும், 26 விசேட
அதிரடிப்படையினர் உட்பட 187 உத்தியோகஸ்தர்கள் தற்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பு கடமையில் இருக்கின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்ற அதிமுக்கிய பிரமுகர்களுக்கு இருக்கக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து 6 மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்யப்பட்டே அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதற்கமைய, தேவைக்கேற்ப கூட்டியும் குறைத்தும் உரிய பாதுகாப்புகளை வழங்குவது பொலிஸ்மா அதிபரின் பொறுப்பாகும்.
எவ்வாறிருப்பினும், மே தினக் கூட்டம் போன்ற விசேட நிலைமைகளின் போது தேவையான மேலதிக பாதுகாப்புகள் வழங்கப்படும். அதைவிடுத்து இதில் அரசியல் நோக்கம் எதுவும் கிடையாது. அச்சுறுத்தல்கள் பற்றிய மதிப்பீடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.
இதயடுத்து கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச எம்.பி.,
“சுமந்திரன் எம்.பிக்குப் விடுதலைப்புலிகளினால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், விடுதலைப்புலிகளை இல்லாதொழித்தவர் மஹிந்த. அப்படியென்றால் சுமந்திரனை விட பல மடங்கு அச்சுறுத்தல் அவருக்கே உள்ளது.
காலிமுகத்திடல் மே தினக் கூட்டத்தில் ஒன்றுகூடிய மக்கள் கூட்டத்தைப் பார்த்து அதற்கான தாக்குதலாகவே பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக தேர்தல்கள் வரும்போது மேலும் குறைக்கப்படும். இவ்வாறு படிப்படியாக பாதுகாப்புக் குறைக்கப்பட்டு அவரைக் கொலைசெய்ய முயற்சி செய்கிறார்கள்” என்றார்.
அதேவேளை , இது பற்றிப் பேசிய அமைச்சர் மங்கள சமரவீர,
“உலகில் எஞ்சியிருக்கும் தமிழ் அடிப்படைவாதிகள் உயிரைக் கொடுத்தாவது பொது எதிரணியை (மஹிந்த அணி) பாதுகாப்பார்கள். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு விளக்கேற்றும் அவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்னுமொரு விளக்கதையும் ஏற்றுகின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வரலாற்றில் முதல் தடவையாக வடக்கிலுள்ள தமிழ் மக்களின் அதிகூடிய வாக்குகளைப் பெற்றவராகக் காணப்படுகின்ற சிங்கள ஜனாதிபதியாக இருக்கும் நிலையில், அதைத் தோற்கடிக்க வேண்டும் என்ற தேவை பொது எதிரணியினருக்கும், உலகில் பல பகுதிகளில் எஞ்சியுள்ள விடுதலைப்புலிகளுக்கும் இருக்கின்றது. இது தொடர்பான ஒப்பந்தம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு விளக்கேற்றும் அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இரண்டாவதாக விளக்கை ஏற்றுவதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது” – என்றார்.