திமுகவுடன் மக்கள் பிரச்சனைக்காக மட்டுமே கைகோர்ப்போமே தவிர தேர்தல் கூட்டணியே வைக்க மாட்டோம் என மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதாவுக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் திமுக, காங்கிரஸுடன் கைகோர்க்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் நெருக்கம் காட்டி வருகின்றன.
ஆனால் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி திமுக- காங்கிரஸுடன் கைகோர்க்க தயங்கி வருகிறது. இந்த நிலையில் திருமாவளவனின் வேண்டுகோள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளதாவது,
பாஜக, காங்கிரஸ் இரண்டுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. இந்த இரு கட்சிகளும் ஒரே மாதிரியாக மக்கள் விரோத கொள்கையையே கடைபிடிக்கின்றன.
இந்த கட்சிகளுடன் திமுகவும் இணைந்து ஆட்சியில் அங்கம் வகித்திருக்கிறது. எங்களைப் பொறுத்தவரையில் மக்கள் பிரச்சனைக்காக மட்டுமே திமுகவுடன் இணைந்து செயல்படுவோம். தேர்தல் கூட்டணியை ஒருபோதும் வைத்து கொள்ளமாட்டோம் இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.