இறுதிக்கட்ட போரின் போது வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் தற்போது இலங்கை வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் புலனாய்வு மற்றும் ஆயுத படை தலைவர்கள் உட்பட புலி உறுப்பினர்கள் மீண்டும் இலங்கைக்கு வருகை தருவதாக இந்திய உளவுத்துறை, இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விடுதலை புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவு பிரதானியாக செயற்பட்ட ஜெயந்தன் எனப்படும் மோகனதாஸ் அண்மையில் மன்னார் வந்து சென்றதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இந்தியாவில் இருந்து மீனவப் படகு மூலம் ஜெயந்தன் மன்னார் வெடிகல்தீவு ஊடாக இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறுதிக்கட்ட போரின் போது புதுமாத்தலனிலிருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பி சென்ற ஜெயந்தன் பின்னர் லண்டன் சென்றுள்ளதாகவும், அந்த நாட்களில் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்திருந்தனர்.
ஜெயந்தன் இதுவரையிலும் இலங்கையை விட்டு வெளியே செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் தங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக தற்போது புலனாய்வு பிரிவுகளினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் பாதுகாப்பு சபையினுள் இந்தியாவின் அறிவிப்பு மற்றும் ஜெயந்தனின் வருகை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.