ஐக்கிய நாடுகள் வெசாக் வைபவத்தில் கலந்து கொள்ளும் அரச தலைவர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் இந்த வாரம் இலங்கைக்கு வருகை தர உள்ளனர்.
இந்த வைபவத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளதுடன், அவர் எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளார்.
இதேவேளை, இறுதி வைபவத்தில் நோபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி (Bidhya Devi Bhandari) பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதுடன் அவர் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் வெசாக் தின வைபவத்தின் இறுதி நிகழ்வு எதிர்வரும் 14ஆம் திகதி கண்டியில் இடம்பெறவுள்ளது.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் அடங்கலாக 750 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் எதிர்வரும் 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளனர்.