தமிழக எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு சேகர் ரெட்டி ரூ.300 கோடி வரை லஞ்சம் கொடுத்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னையை சேர்ந்த மணல் காண்டிராக்டரான சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
குறித்த சோதனையில் ரூ.140 கோடி பணம் சிக்கியது. இதில் 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகளும் இருந்தன. இது தொடர்பாக சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அமலாக்க பிரிவினர் சேகர் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். குறித்த விசாரணையில் சேகர் ரெட்டி தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளிவந்தன.
மணல் குவாரிகளை நடத்தி வந்த சேகர் ரெட்டி, அதில் முறைகேட்டில் ஈடுபட்டதும் அம்பலமானது. இது தொடர்பாக அரசில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கு சேகர் ரெட்டி லஞ்சம் கொடுத்திருப்பதாகவும் அப்போது தகவல் வெளியானது.
இந்த நிலையில் சேகர் ரெட்டியின் 34 கோடி சொத்துக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முடக்கப்பட்டன. அமலாக்க துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதற்கிடையே சேகர் ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ரூ.300 கோடி வரை லஞ்சம் கொடுத்திருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
சேகர் ரெட்டியின் அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடத்திய போது, டைரி ஒன்றும் சிக்கியது.
அதில் மணல் குவாரி தொழில் பற்றியும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பணபரிமாற்றம் குறித்தும் தகவல்கள் இடம்பெற்றிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
தற்போது வருமானவரி துறை அதிகாரிகள் அது தொடர்பான தகவல்களை கசிய விட்டுள்ளனர். சேகர் ரெட்டியின் மணல் குவாரிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வந்ததாக புகார் கூறப்பட்டது. இதனை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காகவே, சேகர் ரெட்டி ரூ.300 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மட்டுமின்றி சேகர் ரெட்டியின் வளர்ச்சியில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் பங்கும் இருப்பதாகவும், அதையும் விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.