நடிகர் ரஜினிகாத்துடன் நடிகை நக்மா சந்திப்பு: ரஜினிக்கு தூது விடுகிறதா காங்கிரஸ்?

நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு இழுக்க பல்வேறு கட்சிகள் முயன்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியின் பொதுச் செயலாளரும் நடிகையுமான நக்மா இன்று ரஜினியை சந்தித்தார்.

தமிழகத்தின் மிகப் பெரிய மாஸ் கொண்ட ஹீரோவான ரஜினிகாந்தை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டால் தமிழகத்தில் நம் கட்சி வலுவாக காலூன்றும் என்ற நம்பிக்கையில் பாஜக தூண்டில் போட்டது.

இதற்கு அச்சாரமாக கடந்த லோக்சபா தேர்தலின் போது ரஜினிகாந்தை பிரதமர் வேட்பாளராக இருந்த மோடி சந்தித்து பேசினார். இதன் பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கங்கை அமரனும் ரஜினியை சந்தித்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளராக ரஜினிகாந்தை நிறுத்த பாஜக தீவிரம் காட்டியது. ஆனால் அவர் ஒதுங்கியே இருந்ததால் தற்போது பாஜக தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டது. இந்நேரத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த தமிழகம், புதுச்சேரிக்கு நக்மா வருகை தந்துள்ளார்.

அவர் பெண்கள் முன்னேற்றம், பாதுகாப்பு என்று பேசி வருகிறார். இந்நிலையில் அவர் போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.

பல்வேறு அரசியல் கட்சிகள் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருவதால் நக்மாவின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும் ரஜினையை அரசியல் ரீதியாக சந்தித்து பேசவில்லை என மறுத்துள்ளார் நக்மா.