மஹிந்த அணியின் மே தினக் கூட்டத்துக்கு கிடைத்த வெற்றியால் மைத்திரி – ரணில் விக்கிரமசிங்க அரசு அதிர்ச்சி அடைந்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மே தினத்தின் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது பிரதிபலித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றக் கூட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூட்டியுள்ளார்.
இந்த கூட்டத்தில் மஹிந்த அணியினரின் மே தினப் பேரணி குறித்து நீண்டநேரம் விவாதம் இடம்பெற்றுள்ளது.
பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா, கட்சி உரிய விதத்தில் தயாராக இருக்கவில்லை. அபிவிருத்தி நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை.
தொகுதி மக்களுக்கு எந்த வேலை வாய்ப்புகளையும் கட்சி வழங்கவில்லை. உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் மே தினக் கூட்டத்துக்கு மேலும் மக்களை கொண்டுவந்திருக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு என ஊடகப்பிரிவு ஒன்று உள்ளதா என சந்தேகம் வெளியிட்டுள்ள அவர், அது மோசமாக செயற்பட்டது என்றும் சாடியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி குறித்து சிறந்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் நாங்கள் தோல்வியை தழுவ தயாராக இருக்க வேண்டும்.
ராஜபக்ஷவின் மீள் வருகை இடம்பெற்றால் மிக மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், “நாங்கள் தேர்தலில் தோற்பதற்கு அச்சமடைந்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு சீற்றத்துடன் பதிலளித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “நீங்கள் அச்சமடைந்தால் நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை. நீங்கள் போகலாம்” என்றும் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் மே தினப் பேரணியில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டதை நான் 100 வீதம் ஏற்றுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மஹிந்த ராஜபக்ஷவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் கோரியுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிடப்பட்டுள்ளது.