கடந்தாண்டு வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாய் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருந்தது.
இதன் காரணமாக இலங்கையின் முழுமையான கடன் 186.6 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதென இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதம் 2015ஆம் ஆண்டு இறுதியில் நூற்றுக்கு 77.6 வீதமாக பதிவாகியுள்ள நிலையில், அரசாங்க கடன் 2016ஆம் ஆண்டு இறுதி வரையில் நூற்றுக்கு 79.3 வீதமாக அதிகரித்துள்ளது.
2016ஆம் ஆண்டு இறுதி வரையில் இலங்கை செலுத்த வேண்டிய முழுமையான கடன் 9,387 பில்லியன் ரூபாயாகும். இது 2015ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 10.4 வீத அதிகரிப்பாகும்.
உள்நாட்டு ரீதியில் செலுத்த வேண்டிய கடன் 5342 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. அது நூற்றுக்கு 7.7 வீத வளர்ச்சியாகும்.
வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடனின் பெறுமதி 4,046 பில்லியன் ரூபாயாகும். 2016ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இது நூற்றுக்கு 14.2 வீத அதிகரிப்பாகும்.
அரசாங்கத்தின் முழுமையான கடன் தொகையில் உள்நாட்டு ரீதியாக 56.9 வீத கடனை செலுத்த வேண்டியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.