அரசியல் ரீதியில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்த்துக் கொள்வதற்காக சில மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(9) இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துரைக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக அமைச்சரவைப் பேச்சாளர் ஒருவரை நியமிக்க கட்சி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், சில அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்து, வெளிப்படுத்தும் போது ஏற்படுகின்ற சிக்கல்களைத் தவிர்த்துக் கொள்வதற்காகவே இந்த மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம்.
இதனை வைத்துக் கொண்டு இது ராஜிதவுக்கு எதிரான முயற்சி என்று நினைக்கக் கூடாது. அவருக்கு எதிரான எந்த முயற்சியும் அல்ல. ஊடகவியலாளர் சந்திப்புக்களின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் சரியாகக் கொண்டு செல்வதற்காகவே இந்த மாற்றத்தை கட்சி முன்னெடுக்கவுள்ளது.
ராஜித சேனாரத்ன அமைச்சரவைப் பேச்சாளர் என்ற வகையில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவை தலைமையாகக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இந்த மாற்றமானது அரசியல் தரப்பில் பெரிதும் பேசு பொருளாக மாறியுள்ளது.