சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடமில்லை: பிசிசிஐ-யை வசைபாடிய காம்பீர் ரசிகர்கள்

இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கியவர் கவுதம் காம்பீர். நீண்ட காலமாக இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக காம்பீர் விளையாடி வருகிறார். இந்த தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். உள்ளூர் தொடர்களிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்குப்பதில் தன்னை தேர்வு செய்யலாம் என்று எதிர்பார்த்தார். ஆனால் பிசிசிஐ தேர்வுக்குழு தவானை தேர்வு செய்துள்ளது.

காம்பீரை தேர்வு செய்தாத பிசிசிஐ-யை காம்பீர் ரசிகர்கள் வசைபாடியுள்ளனர்.

அவரது ரசிகர் ஒருவர் டுவிட்டரில் ‘‘பிசிசிஐ, அரசியலை நிறுத்துங்கள். உங்களுடைய தவறுகளில் இருந்து நீங்கள் எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை. பணம் மட்டுமே உண்மையின் அளவீடு இல்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர் ‘‘அணி தேர்வானது வீரர்களுக்கும் பிசிசிஐக்கும் இடையிலான உறவின் அடிப்படையில் இல்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வினோத் குமார் என்பவர் ‘‘காம்பீரின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. என்ன தவறு உள்ளது’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். அருண் என்பவர் ‘‘ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் காம்பீரை ஏன் தேர்வு செய்யவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை. இந்த ஐ.பி.எல். தொடர் உள்பட பல தொடர்களில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.