இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பின் அணியில் இடம்பிடிக்கவில்லை.
தற்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகிறார். மதிப்பிற்குரிய சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. இது தனக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று ரெய்னா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரெய்னா கூறுகையில் ‘‘இப்போது என்னால் என்ன சொல்ல முடியும்?. இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அத்துடன் வலியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் நான் மீண்டும் அணியில் தேர்வு செய்யப்படுவேன் என்று எதிர்பார்த்தேன்.
தொடர்ச்சியாக நான் நன்றாக பேட்டிங் செய்து வந்துள்ளேன். ஐ.பி.எல். தொடரில் எனது திறமையை நிரூபித்துள்ளேன். உறுதியாக நான் எதிர்பார்த்ததுபோல் அமையவில்லை. ஆனால், ஒருநாள் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் வகையில் என்னுடைய பேட்டிங் பேசவைக்கும்’’ என்றார்.