சேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்கியவர்களில் முன்னாள் இந்நாள் முதலமைச்சர்கள் இருவர் பெயரும் இடம் பெற்றிருப்பதால் யூலை மாதத்திற்கு பின்னர் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது கைப்பற்றப்பட்ட டைரியில் அமைச்சர்களின் பெயர்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணமும் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாயின.
ஆனால், சேகர் ரெட்டியிடம் விசாரித்த போது தாம் டைரி எதுவும் எழுதவில்லை என்று கூறியதாக அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி தைரியம் கூறியுள்ளார்.
அதே நேரம், வருமான வரித்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நடவடிக்கை எடுத்து விடுவார் என்ற அச்சமும் நிலவியது.
அதனால், அவரிடம் இருந்த லஞ்ச ஒழிப்பு துறை பறிக்கப்பட்டு நிரஞ்சன் மார்டியிடம் அந்த பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், சேகர் ரெட்டி டைரி எதுவும் எழுதவில்லை என்பது உண்மைதான் ஆனால், எந்தெந்த அமைச்சர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பதை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலை துறை, வீட்டு வசதித்துறை ஆகிய நான்கு துறைகளின் முக்கிய ஒப்பந்ததாரராக இருந்த சேகர் ரெட்டி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தற்போதைய முதல்வர் எடப்பாடி, மின்துறை அமைச்சர் தங்கமணி, வீட்டு வசதி துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி, பன்னீர் உள்ளிட்ட இருவர் பெயரும் சேகர் ரெட்டியின் நோட்டு புத்தக குறிப்பில் இடம் பெற்றுள்ளதால் இப்போதைக்கு எந்த நடவடிக்கையும் வேண்டாம் என்று டெல்லி நினைப்பதாக தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி வரும் யூலை மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் அதிமுக எம்.எல்.ஏ க்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் தமக்கு வேண்டும் எனவும் பாஜக விரும்புகிறது.
ஆகவே, ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் சேகர் ரெட்டி குறிப்பின் அடிப்படையில் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதான நடவடிக்கை உறுதி என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.