10-வது ஐ.பி.எல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது.
வீராட் கோலி, டிவில்லியர்ஸ், கிறிஸ்கெய்ல், வாட்சன், கேதர் ஜாதவ் போன்ற அதிரடி வீரர்களை கொண்ட அந்த அணி இதுவரை 2 ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. 10 ஆட்டங்களில் தோற்று ‘பிளேஆப்’ வாய்ப்பை ஏற்கனவே இழந்தது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. அந்த அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை 14-ந்தேதி சந்திக்கிறது.
இந்த நிலையில் மோசமான ஆட்டத்துக்காக கிறிஸ்கெய்ல் பெங்களூர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக பெங்களூரில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கூறியதாவது:-
எங்கள் அணி வீரர்களின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. வீரர்களுக்கு ஆதரவு கொடுத்த பெங்களூர் ரசிகர்களுக்கு தோல்வியால் மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டு இருக்கும். இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
வெஸ்ட் இண்டீசை சேர்ந்த சுனில் நரீன் கொல்கத்தா அணியில் தொடக்க வீரராக விளையாடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுக்கு எதிராக ஆட்டத்தில் அவர் 15 பந்தில் 50 ரன் எடுத்தது நம்ப இயலாதது ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிரடி வீரரான கிறிஸ் கெய்லின் ஆட்டம் இந்த ஐ.பி.எல். தொடரில் மோசமாக இருந்தது. இதுவே பெங்களூர் அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாகும். அவர் 8 ஆட்டத்தில் விளையாடி 152 ரன்களே எடுத்தார். சராசரி 19 ஆகும். அதிகபட்சமாக 77 ரன் எடுத்தார். 2 ஆட்டத்தில் ‘டக்அவுட்’ ஆனார்.