சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆதிக்கம் செலுத்தும்: கங்குலி சொல்கிறார்

சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான் ஒரே பிரிவில் இடம்பிடித்துள்ளன. இரு அணிகளும் 4-ந்தேதி பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டிக்கு இன்னும் 25 நாட்கள் உள்ள நிலையில் இந்த போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து கூற ஆரம்பித்துவிட்டனர். பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி கூறியுள்ளார்.

இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தும். 8 முதல் 10 வருடங்களில் இரு அணிகளுக்கு இடையிலான தரத்தில் மிகப்பெரிய வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. இதுவே இந்தியா ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்துவதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்தியா மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

ஆனால், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய தலைமை தேர்வாளருமான இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக நாங்கள் முக்கியமான தொடரில் சிறந்த சாதனைப் படைக்கவில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் புதிய நாட்கள். முதல் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதை உறுதியாக கூறுகிறேன். ஜூன் 4-ந்தேதி நடக்கும் போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவிற்கு எதிரான போட்டி என்பதால் மட்டுமல்ல. அரையிறுதி போட்டிக்குச்செல்ல முக்கிய காரணமாக இருக்கும்’’ என்றார்.