இன்று செல்வம் தரும் சித்ரா பவுர்ணமி விரதம்

மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும், சித்திரையில் பவுர்ணமிக்கு என்று ஒரு தனி சிறப்பு உள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று காலையில் குளித்து முடிந்து பூஜையறையில் விநாயகர் படத்தை நடுவில் வைத்து, சிவனை எண்ணி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் செய்து படைத்து அதனை எல்லோருக்கும் அளிக்கலாம்.

சித்திரை மாதத்தில் தாராளமாகக் கிடைக்கும் மா, பலா, வாழை போன்ற பழங்களை இறைவனுக்கு படைத்து பூஜிப்பார்கள். இந்த நாளில் உறவினர், நண்பர்களுடன் நதிக்கரையில் உரையாடியபடி உண்பது தான் பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கமாகும்.

புழுக்கத்தையும், வெயிலின் உஷ்ணத்தையும் சமாளிக்க இப்படி நீர்நிலைக்கு அருகில் மக்களை வரவைப்பதே இந்த சித்ரா பவுர்ணமியின் விஞ்ஞானப் பூர்வ உண்மை. இத்தினம் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதமாகவும் அமைகின்றது.

இத்தினத்தில் அம்மன் ஆலயங்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விசேஷ அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம் பெறுகின்றது. சிவாலயங்களிலும், பெருமாள் (விஷ்ணு) கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறைவழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன.

அம்மனுக்கு சிறப்பு பொருந்திய இச்சித்ரா பவுர்ணமி விரதநாளிலேயே எமனின் சபையில் நம்பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுவதால் சித்திர புத்திரனார் விரதமும் அமைகின்றது.

ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய, பாவங்களைக் கணிப்பவர், சித்திர புத்திரனார் என்பது நம்பிக்கை, நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை நமது இறப்பின் பின் கணித்து அதற்கேற்ப மோட்சமோ, நரகமோ, மறு பிறவியில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது இந்துக்களின் ஐதீகம். சில கோவில்களில் சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது