முதியோர்களின் விருப்பத்திற்கிணங்க திரையிடப்படும் `பாகுபலி-2′

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து வரும் படம் `பாகுபலி-2′. `பாகுபலி’ படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் ரிலீசானது.

`பாகுபலி’ படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.650 கோடி வசூலித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள `பாகுபலி-2′, ரிலீசாகி 2 வாரங்களை நெருங்கியுள்ள நிலையில் உலகம் முழுவதும் இப்படம் ரூ.1227 கோடியை வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் `பாகுபலி-2′-ன் வசூல் வேட்டை ரூ.850 கோடியை தாண்டியிருக்கிறது.

இந்நிலையில், `பாகுபலி-2′ படத்தினை அன்னையர் தினத்தன்று சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள தாய்மார்களை மகிழ்விக்கும் விதமாக சிறப்பு காட்சிக்கு சமூக அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.

இளைஞர் சமூக அமைப்பு ஒன்று, ஆனந்தம் முதியோர் இல்லத்தில் உள்ள தாய்மார்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு நாள் கொண்டாட்டத்திற்கு இந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்த அமைப்பின் நல்லெண்ணத் தூதராக ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா பொறுப்பு வகிக்கிறார்.

சென்னை அம்பத்தூரில் இயங்கி வரும் ஆனந்தம் முதியோர் இல்லத்தில் உள்ள 101 முதியவர்களின் விருப்பத்திற்கு இணங்க, வருகிற அன்னையில் தினத்தை(மே 14) முன்னிட்டு வருகிற மே 13-ஆம் தேதி ராக்கி சினிமாஸில் `பாகுபலி-2′ படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட இருக்கிறது.