ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி – சாயிஷா சேகல் இணைந்து நடித்துள்ள படம் `வனமகன்’. இப்படத்தில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்திருக்கிறார். திங்க் பிக் ஸ்டுடியோ மற்றும் கோனா பிலிம் கார்ப்போரேஷன் இணைந்து தயாரித்தள்ள இப்படத்தில், வருண், பிரகாஷ் ராஜ், தம்பிராமையா, சாம் பால், வேல ராமமூர்த்தி, சஞ்சய் பாரதி, ரம்யா சுப்ரமணியன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் 50-வது படமான `வனமகன்’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அடுத்த மாதம் வரை தள்ளிவைத்து படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து திங்க் பிக் ஸ்டூடியோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
`வனமகன்’ படத்தின் அனைத்து விதமான பணிகளும் முடிவடைந்ததால், படத்தை வருகிற மே 19-ஆம் தேதியே வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால் திருட்டு விசிடி உள்ளிட்ட தமிழ் சினிமாவில் நிகழும் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 30-ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள், சினிமா காட்சிகள் முதலிவை ரத்து செய்யப்படுகிறது. எனவே `வனமகன்’ படத்தை தயாரிப்பாளர் சங்க போராட்டத்திற்கு பின்னர் ரிலீஸ் செய்ய விஷால் தரப்பினர் பரிந்துரைத்ததை அடுத்து, படத்தின் ரிலீஸ் தேதியை ஜுன் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.