ரஜினிகாந்த் பல வருடங்களாக அவருடைய ரசிகர்களை நேரில் சந்திக்கவில்லை.
எனவே, ரசிகர்களின் விருப்பப்படி கடந்த எப்ரல் மாதம் ரஜினி அவரது ரசிகர்களை சந்திக்க முடிவு செய்தார். இதற்காக ஏற்பாடுகள் நடந்தன. ஆலோசனை கூட்டமும் நடந்தது. ரஜினியை சந்திக்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
இந்த நிலையில், ரஜினி ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி திடீர் என்று ரத்து செய்யப்பட்டது. இதுபற்றி அறிக்கை வெளியிட்ட ரஜினி, குறுகிய காலத்தில் அனைத்து ரசிகர்களையும் சந்தித்து அவர்களுடன் தனித்தனியே புகைப்படம் எடுப்பது கடினம். வரும் காலத்தில் ஒவ்வொரு மாவட்டமாக அல்லது 2 மாவட்டமாக அவர்களை அழைத்து தனித்தனியாக புகைப்படம் எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். விரைவில் அந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இப்போது ரஜினி அவரது ரசிகர்களை சந்திக்க நாள் ஒதுக்கி உள்ளார். முதல் கட்டமாக 5 நாட்கள் 15 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்திக்கிறார்.
வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதிவரை இந்த சந்திப்பு நடைபெறுகிறது. சென்னையில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தினமும் 3 மாவட்டங்கள் வீதம் 5 நாட்களில் 15 மாவட்ட ரசிகர்களை சந்திக்க ரஜினி திட்டமிட்டுள்ளார்.
இதில் கன்னியாகுமரி, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் ரசிகர்கள் ரஜினியுடன் சந்திக்கிறார்கள். பின்னர் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.
பெரும்பாலான ரசிகர்கள் விருப்பப்படி, ரஜினி ரசிகர்களுடன் தனித் தனியாக புகைப்படம் எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நண்பர்கள், நிர்வாகிகள் சேர்ந்தும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டமாக மற்றொரு தேதியில் மீதம் உள்ள மாவட்டங்களில் இருந்து ரசிகர்கள் வரவழைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
ரஜினி நேரில் சந்தித்து புகைப்படம் எடுப்பதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.